டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு? கோவை- நெல்லை அணிகள் இன்று பலப்பரீட்சை


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு? கோவை- நெல்லை அணிகள் இன்று பலப்பரீட்சை
x

நெல்லையில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நெல்லையில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8 அணிகள் இடையிலான தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கியது. கோவை, சேலம், நத்தம் (திண்டுக்கல்), நெல்லை ஆகிய இடங்களில் நடந்த லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து பிளே-ஆப் சுற்றை எட்டின. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், பால்சி திருச்சி அணிகள் முறையே 5 முதல் 8 இடங்களை பெற்று வெளியேறின.

இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்சை எதிர்கொள்கிறது.

ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி லீக் சுற்றில் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன், முதலாவது தகுதி சுற்றில் 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்தது. அந்த அணியில் பேட்டிங்கில் சச்சின், முகிலேஷ், சுரேஷ் குமாரும், பந்து வீச்சில் எம்.முகமது, தாமரை கண்ணன், யுதீஸ்வரனும், ஆல்-ரவுண்டராக ஷாருக்கானும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். சூப்பர் பார்மில் இருந்த சாய் சுதர்சன் முதல்தர கிரிக்கெட் போட்டிக்கு சென்றது அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான்.

அதே சமயம் லீக் சுற்று முடிவில் 3-வது இடம் (5 வெற்றி, 2 தோல்வி) பெற்ற அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை அணி வெளியேற்றுதல் சுற்றில் 4 ரன் வித்தியாசத்தில் மதுரையையும், 2-வது தகுதி சற்றில் 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல்லையும் பதம் பார்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. குறிப்பாக தகுதி சுற்றில் கடைசி 2 ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்ட போதிலும் 6 சிக்சருடன் அஜிதேஷ், ரித்திக் ஈஸ்வரன் இலக்கை எட்ட வைத்து பிரமிக்க வைத்தனர். அந்த அணியில் பேட்டிங்கில் அஜிதேஷ் (ஒரு சதம், 3 அரைசதத்துடன் 384 ரன்), நிதிஷ் ராஜகோபால், ரித்திக் ஈஸ்வரன், அருண் கார்த்திக்கும், பந்து வீச்சில் சோனு யாதவ், சந்தீப் வாரியர், பொய்யாமொழி, லக்ஷய் சென்னும் வலுசேர்க்கிறார்கள்.

லீக் ஆட்டத்தில் நெல்லை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி இருந்தது. இதனால் நெல்லை அணி நல்ல நம்பிக்கையுடன் களம் காணுவதுடன், சாதகமான உள்ளூர் சூழலை பயன்படுத்தி முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்த தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் கடந்த ஆண்டு மழையால் இறுதி ஆட்டம் பாதித்ததால் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து கூட்டாக சாம்பியன் பட்டத்தை பகிர்ந்த கோவை அணி மீண்டும் கோப்பையை கைப்பற்ற வரிந்து கட்டும். மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

கோவை கிங்ஸ்: சுஜய், சுரேஷ் குமார், சச்சின், முகிலேஷ், ஷாருக்கான் (கேப்டன்), ராம் அரவிந்த், ஆதிக் உர் ரகுமான், எம்.முகமது, எம்.சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், யுதீஸ்வரன், தாமரை கண்ணன்.

நெல்லை ராயல் கிங்ஸ்: அருண் கார்த்திக் (கேப்டன்), சுஜேந்திரன், அஜிதேஷ், நிதிஷ் ராஜகோபால், ரித்விக் ஈஸ்வரன், சூர்யபிரகாஷ், சோனு யாதவ், ஹரிஷ், பொய்யாமொழி, லக்ஷய் சென், மோகன் பிரசாத், சந்தீப் வாரியர்.

இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story