டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் - இந்திய பொறுப்பு கேப்டன் ராகுல் பேட்டி


டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் - இந்திய பொறுப்பு கேப்டன் ராகுல் பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2022 7:07 PM GMT (Updated: 12 Dec 2022 7:09 PM GMT)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இனி வரும் போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியம் என்று இந்திய பொறுப்பு கேப்டன் லோகேஷ் ராகுல் கூறினார்.

சட்டோகிராம்,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற நாங்கள் இனி வரும் போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டியது அவசியம் என்று இந்திய பொறுப்பு கேப்டன் லோகேஷ் ராகுல் கூறினார்.

இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட்

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 52.08 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடம் வகிக்கிறது. முதல் 3 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (75 சதவீதம் புள்ளி), தென்ஆப்பிரிக்கா (60 சதவீதம்), இலங்கை (53.33 சதவீதம்) ஆகிய அணிகள் உள்ளன. இங்கிலாந்து 44.44 சதவீதத்துடன் 5-வது இடத்தில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்றாக வேண்டும்.

ராகுல் பேட்டி

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா முதலாவது டெஸ்டில் விலகியதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக பணியாற்ற உள்ளார்.

அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ' உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றை எட்டுவதற்கு நாங்கள் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். தற்போது எந்த நிலையில் இருக்கிறோம், இறுதி சுற்றை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். களத்தில் ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட பகுதிகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ப சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். வங்காளதேசத்துக்கு எதிரான தொடரில் இப்படி தான் விளையாட வேண்டும் என்று எந்த இலக்கும் நிர்ணயிக்கவில்லை. ஆனால் போட்டியில் முடிவு கிடைக்க துணிச்சலாகவும், ஆக்ரோஷமாகவும் விளையாட முயற்சிப்போம்.

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் இரு டெஸ்ட் போட்டிகளையும் பார்த்தேன். உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருந்தது. உற்சாகமாக கண்டு ரசித்தேன். போட்டியில் ஆதிக்கம் செலுத்த இது போன்று பயமின்றி விளையாட வேண்டும். ஆனால் ஒவ்வொரு அணிக்கும் தங்களுக்கு என்று தனி ஆட்ட பாணி உண்டு. எப்போதும் ஒரே மாதிரி விளையாடிக் கொண்டிருக்க முடியாது. சூழ்நிலைக்கு தக்கபடி செயல்பட வேண்டும்' என்றார்.

ரோகித் சர்மா குறித்து...

மேலும் ராகுல் கூறுகையில், 'ரோகித் சர்மா எங்கள் அணியின் முக்கியமான வீரர். மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். எங்கள் அணியின் கேப்டன். அவரை போன்ற வீரரை தவற விடுவது பின்னடைவு தான். 2-வது டெஸ்டுக்குள் அவர் காயத்தில் இருந்து மீண்டு விடுவார் என்று நம்புகிறோம். இந்த போட்டிக்கு துணை கேப்டனாக புஜாராவை நியமித்தது குறித்து கேட்கிறீர்கள். துணை கேப்டனை பொறுத்தவரை அதற்கு என்ன தகுதியாக நிர்ணயித்து இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது' என்றார்.


Next Story