எனக்கு உருவாக்கப்பட்ட அதே சூழலை உருவாக்க முயற்சிக்கிறேன் - அர்ஜுன் குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்


எனக்கு உருவாக்கப்பட்ட அதே சூழலை உருவாக்க முயற்சிக்கிறேன் - அர்ஜுன் குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 4 Jun 2023 10:53 AM GMT (Updated: 4 Jun 2023 10:58 AM GMT)

தனக்கு கிடைத்த சுதந்திரமான சூழலை தனது மகனுக்கும் உருவாக்க முயற்சி செய்து வருவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

என்னுடைய மகனுக்கு எனக்கு கிடைத்த அதே சூழலை உருவாக்க நான் நினைக்கிறேன். நீங்கள் உங்களை பாராட்டினால் உலகம் உங்களை பாராட்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக 'சிண்டிலேட்டிங் சச்சின்' புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது பேசிய அவர், "இளம் வயதில் எனது குடும்பத்தினரிடமிருந்து எனக்கு ஆதரவு கிடைத்தது. எனது சகோதரர் அஜித் டெண்டுல்கர் என் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகித்தார். மற்றொரு சகோதரர் நிதின் டெண்டுல்கர் எனது பிறந்தநாளில் எனக்காக ஓவியம் வரைந்து கொடுப்பார்.

எனது தாயார் எல்ஐசியில் பணிபுரிந்து கொண்டிருந்தார், அப்பா பேராசிரியராக இருந்தார். அவர்கள் எனக்கு சுதந்திரத்தை வழங்கினர். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் சுதந்திரமாக செயல்பட விடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு கிடைத்த அந்த சுதந்திரமான சூழலை என் மகனுக்காகவும் உருவாக்க முயற்சிக்கிறேன். நம்மை நாம் பாராட்டினால்தான் மக்களும் நம்மை பாராட்டுவார்கள். விளையாட்டில்தான் கவனம் இருக்க வேண்டும் என்று என் அப்பா என்னிடம் சொன்ன அறிவுரையை இப்போது நான் அர்ஜுனிடம் சொல்கிறேன்.

நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பொழுது ஊடகங்கள் என்னைப் பாராட்டின. நான் அவர்களிடம் என் மகன் விளையாட்டில் கவனம் செலுத்தவும் விளையாட்டை காதலிக்க விடுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்கள் என் மகனுக்குச் சுதந்திரம் கொடுத்தார்கள். நான் இதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நான் காயங்களால் மிகவும் பாதிக்கப்பட்டேன். இதனால் நான் இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்து இருந்தேன். ஆனால் அப்பொழுது என்னுடைய மனைவி அஞ்சலி நேராக ஆஸ்திரேலியா வந்து, அறுவை சிகிச்சையை ரத்து செய்து, என்னுடன் இருந்து என்னை கவனித்துக் கொண்டார்" என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார்.


Next Story