குஜராத்தை வீழ்த்தி உ.பி.வாரியர்ஸ் த்ரில் வெற்றி...பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்...!


குஜராத்தை வீழ்த்தி உ.பி.வாரியர்ஸ் த்ரில் வெற்றி...பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தல்...!
x

Image Courtesy: @wplt20

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும். இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்களை பொறுத்தவரையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத்-உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஹேமலதா மற்றும் கார்ட்னெர் ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 178 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவிகா வைதியா மற்றும் அலிசா ஹீலி ஆகியோர் களம் புகுந்தனர். இதில் வைதியா 7 ரன்னிலும், அலிசா ஹீலி 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் புகுந்த கிரண் நவ்கிரே 4 ரன்னில் வீழ்ந்தார்.

இதையடுத்து களம் இறங்கிய தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். அரைசதம் அடித்திருந்த நிலையில் 57 ரன்னில் வீழ்ந்தார். இதையடுத்து களம் இறங்கிய தீப்தி ஷர்மா 6 ரன்னில் வீழ்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹாரிஸ் 72 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. மும்பை மற்றும் டெல்லி அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. தற்போது 3வது அணியாக உ.பி.வாரியர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.



Next Story