சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு மகளிர் அணி: வீடியோ காலில் வாழ்த்து சொன்ன விராட் கோலி


சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு மகளிர் அணி: வீடியோ காலில் வாழ்த்து சொன்ன விராட் கோலி
x

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டெல்லியை சுருட்டி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், டெல்லி கேப்பிட்டல்சும் மோதின.

'டாஸ்' ஜெயித்த டெல்லி கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முடிவில் டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. நடப்பு தொடரில் அந்த அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். பெங்களூரு தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரேயங்கா பட்டீல் 4 விக்கெட்டும், மோலினெக்ஸ் 3 விக்கெட்டும், ஆஷா சோபனா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

அடுத்து 114 ரன் இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஸ்மிர்தி மந்தனாவும், சோபி டேவினும் களம் புகுந்தனர். இலக்கு குறைவு என்பதால் இருவரும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட்டனர் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு ஓட விட்டனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்து பிரிந்தனர். சோபி டேவின் 32 ரன்னில் (27 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து எலிஸ் பெர்ரி வந்தார். இன்னொரு பக்கம் வழக்கத்திற்கு மாறாக மந்தமாக ஆடிய மந்தனா 15-வது ஓவரில் ஆட்டமிழந்தாலும் 31 ரன்களே (39 பந்து, 3 பவுண்டரி) எடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு பெர்ரியுடன், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் இணைந்து ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்தினார். கடைசி ஓவரில் பெங்களூருவின் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி வீசினார். முதல் 2 பந்தில் பெங்களூரு வீராங்கனைகள் 2 ரன் எடுத்தனர். 3-வது பந்தை ரிச்சா கோஷ் அட்டகாசமாக பவுண்டரிக்கு விரட்டியடித்து தித்திப்பாக முடித்து வைத்தார்.

பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. எலிஸ் பெர்ரி 35 ரன்களுடனும் (37 பந்து, 4 பவுண்டரி), ரிச்சா கோஷ் 17 ரன்களுடனும் (14 பந்து, 2 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

டெல்லிக்கு எதிராக 5-வது முறையாக மோதிய பெங்களூரு அதில் பெற்ற முதல் வெற்றி இது தான். கடந்த ஆண்டு மும்பை இந்தியன்சிடம் கோப்பையை விட்ட டெல்லிக்கு 2-வது முயற்சியிலும் சோகமே மிஞ்சியிருக்கிறது. கோப்பையை உச்சிமுகர்ந்த பெங்களூரு அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த டெல்லிக்கு ரூ.3 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் வெற்றி பெற்ற மகளிர் அணியை வீடியோ காலில் தொடர்பு கொண்டு விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பெங்களூர் மகளிர் சாம்பியன் பட்டத்தை வென்றதற்காக விராட் கோலி சமூக ஊடகங்களில் சிறப்பு வாழ்த்து செய்தியை பதிவு செய்தார்.


Next Story