இந்திய கிரிக்கெட் அணியில் 4-வது பேட்டிங் வரிசைக்கு கோலி பொருத்தமானவர் - டிவில்லியர்ஸ்


இந்திய கிரிக்கெட் அணியில் 4-வது பேட்டிங் வரிசைக்கு கோலி பொருத்தமானவர் - டிவில்லியர்ஸ்
x

விராட்கோலி (image courtesy: ICC via ANI)

இந்திய கிரிக்கெட் அணியில் 4-வது பேட்டிங் வரிசையில் விளையாட விராட்கோலி பொருத்தமானவர் என்று தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி தொடங்குகிறது. ஆனால் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் 4-வது வரிசை பேட்ஸ்மேனாக களம் இறங்ககூடியவர் யார் என்பது இதுவரை உறுதியாக அடையாளம் காணப்படவில்லை.

யுவராஜ் சிங் ஓய்வுக்கு பிறகு அந்த வரிசையில் நிலைத்து நின்று விளையாடக்கூடிய சரியான வீரர் கிடைக்காமல் இந்திய அணி தவித்து வருகிறது. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணிக்கு 4-வது வரிசையில் பேட்டிங் செய்ய விராட்கோலி பொருத்தமானவராக இருப்பார் என்று தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய அணிக்கு 4-வது வரிசை பேட்டிங் வரையில் யாரை இறக்கலாம் என்று இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறோம். விராட்கோலி அந்த வரிசையை ஏற்கலாம் என்று சில வதந்திகளை கேள்விப்படுகிறேன். அதற்கு நான் பெரிய ஆதரவை தெரிவிப்பேன். விராட்கோலி 4-வது பேட்டிங் வரிசையில் களமிறங்க பொருத்தமானவர் என்று நான் நினைக்கிறேன். நிலைத்து நின்று விளையாடக்கூடிய அவரால் மிடில் ஆர்டரில் எந்த வரிசையிலும் ஆட முடியும். ஆனால் அவர் அதனை செய்ய விரும்புவாரா என்பது எனக்கு தெரியாது. விராட்கோலி தனது இடமான 3-வது வரிசையில் விளையாட விரும்புவார் என்பது நமக்கு தெரியும். அந்த வரிசையில் தான் அவர் பெரும்பாலான ரன்களை குவித்துள்ளார். அதேநேரத்தில் அணியின் தேவைக்கு அவர் அந்த இடத்தில் ஆட வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டு இருப்பது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. அவர் திறமையான பவுலர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் அணிக்கு முக்கியமான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

34 வயதான விராட்கோலி ஒருநாள் போட்டியில் 4-வது வரிசையில் 42 ஆட்டங்களில் விளையாடி 1,767 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 7 சதமும், 8 அரைசதமும் அடங்கும். ஐ.பி.எல். போட்டியில் டிவில்லியர்ஸ், விராட்கோலியுடன் இணைந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story