நேரத்தை வீணடிக்க விருப்பவில்லை... உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் - தன் காதல் கதையை பகிர்ந்த சாஹல்...!
ஆன்லைன் நடன வகுப்பு மூலம் யுஸ்வேந்திர சாஹலுக்கும் தனஸ்ரீக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதனிடையே, சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா. பல் மருத்துவரான தனஸ்ரீ யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ளார்.
நடன கலைஞராகவும் இருந்த தனஸ்ரீ தான் நடனமாடும் வீடியோக்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து அதன் மூலம் பிரபலமானார். அதேவேளை, கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் தனஸ்ரீ நடன வகுப்புகளும் எடுத்துவந்தார். அப்போது தனஸ்ரீக்கும் சாஹலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் கடந்த 2020 டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், தன் காதல் கதையை சாஹல் பகிர்ந்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சாஹல் தன் காதல் கதையை கூறினார்.
அவர் கூறுகையில், கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது நான் என் குடும்பத்துடன் இருந்தேன். குருகிராமில் உள்ள எனது வீட்டில் நான் நீண்ட நாள்கள் இருந்தது அதுவே முதல்முறை. கிட்டத்தட்ட 4 மாதங்கள் நான் என் குடும்ப உறுப்பினர்கள் என் செல்லப்பிராணிகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன்.
அப்போது, நான் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வமாக இருந்தேன். அப்போது, தனஸ்ரீ ஆன்லைனில் நடன பயிற்சி வகுப்பு நடத்துவதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நான் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொண்டேன்.
அப்போது ஒருநாள் தனஸ்ரீயிடம் நீங்கள் ஏன் வாழ்க்கையில் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர் நான் எப்போது இப்படித்தான் இருப்பேன். வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களில் நான் மகிழ்ச்சியை தேடுவேன்' என்றார்.
எனக்கு எல்லாம் சரியாக அமைந்தது என் குடும்பத்திடம் கூறினேன். பின்னர் தனஸ்ரீயிடம், எனக்கு 30 வயதாகிறது. டேட்டிங் செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உங்களுடன் டேட்டிங் செய்ய விரும்பவில்லை' என்றேன்.
அதற்கு தனஸ்ரீ, முடியாது நான் உங்களை நேரில் பார்ததே இல்லை. முதலில் உங்களை நேரில் பார்க்க வேண்டும்' என்றார். பின்னர் நாங்கள் மும்பையில் சந்தித்தோம். அங்கு தனஸ்ரீ, சரி திருமணத்திற்கு சரி என்று கூறினார்' என தன் காதல் திருமண தகவலை சாஹல் கூறினார்.