ஆசியகோப்பை: ஜடேஜா வீசிய பந்தில் பாக். வீரர் முகத்தில் காயம் - ரத்தம் வந்ததால் பரபரப்பு
ஆசியகோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதின.
கொழும்பு,
16வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் நேற்று முன் தினம் இந்தியா - பாகிஸ்தான் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ராகுல் 17 ரன்னிலும், கோலி 8 ரன்னிலும் களத்தில் இருந்தனர். மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு மாற்று நாளில் (ரிசர்வ் டே) ஆட்டம் மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாற்றுநாளாக (ரிசர்வ் டே) நேற்று மாலை ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியது முதலே கோலி, ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் விளாசினர். இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. கோலி 122 ரன்னுடனும், ராகுல் 111 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் 32 ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் குல்தீப் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
போட்டியின் போது இந்திய வீரர் ஜடேஜா வீசிய பந்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மென் சல்மான் அஹா அலிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. 21 வது ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா வீசியபோது 3 ரன்னுடன் களத்தில் இருந்த பாகிஸ்தான் பேட்ஸ்மென் சல்மான் 'ஸ்வீப் ஷாட்' ஆட முயற்சித்தார். ஹெல்மெட் அணியாமல் சல்மான் தொப்பி மட்டும் வைத்து ஆடிய போது ஜடேஜா வீசிய பந்து சுழன்று சல்மானின் முகத்தை தாக்கியது. சல்மானின் கண் அருகே பந்து தாக்கிய நிலையில் சில விநாடிகளில் அவரின் கன்னத்தில் இருந்து ரத்தம் வர தொடங்கியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. காயம் அதிகமாக இல்லாததால் சல்மான் தன் ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனால், அவர் 23 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜடேஜா வீசிய பந்தில் சல்மானின் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்த நிகழ்வு தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.