'எந்த வீரரும் முக்கியமான போட்டிகளை தவற விடுவதை நாங்கள் விரும்பவில்லை' - ரோகித் சர்மா


எந்த வீரரும் முக்கியமான போட்டிகளை தவற விடுவதை நாங்கள் விரும்பவில்லை - ரோகித் சர்மா
x

இந்திய அணியில் யாருக்கும் தானாகவே இடம் கிடைத்து விடாது என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

மும்பை,

ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டிக்கான இந்தியாவின் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செயல்படுகிறார். மும்பையில் நேற்று நடந்த இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோகித் சர்மா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் 4-வது வரிசை நீண்டகாலமாகவே பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. யுவராஜ்சிங்குக்கு பிறகு அந்த இடத்தில் எந்த பேட்ஸ்மேனும் தங்களை வலுவாக நிலைநிறுத்திக்கொள்ளவில்லை. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் 4-வது வரிசையில் நன்றாக விளையாடினார். கணிசமான ரன்களும் குவித்தார். துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாய் அய்யருக்கு காயம் கொஞ்சம் குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.


உண்மையை சொல்ல வேண்டும் என்றால், 4-5 ஆண்டுகளாக இது தான் நடக்கிறது. அந்த வரிசையில் ஆடிய நிறைய வீரர்கள் காயமடைந்து இருப்பதும், பிறகு அந்த இடத்திற்கு புதிய வீரர்கள் வந்து ஆடுவதும் வாடிக்கையாகி விட்டது. இருப்பினும் எந்த வீரரும் அந்த வரிசையில் கச்சிதமாக பொருந்தவில்லை. சரியான வீரர்களை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது.

கடந்த 4-5 ஆண்டுகளாக வீரர்கள் அதிக அளவில் காயமடைவது நமது நீண்டகால திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீரர்கள் காயமடையும் போதோ அல்லது அணித் தேர்வில் இருந்து ஒதுங்கி இருக்கும் போதோ புதிய வீரர்களை கொண்டு வெவ்வேறு விதமான முயற்சிகளை செய்து பார்க்கிறோம். அதனால் தான் 4-வது பேட்டிங் வரிசையை பற்றி பேச வேண்டி இருக்கிறது. நான் கேப்டனாக இல்லாத போது கூட இந்த வரிசையில் நிறைய வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்திருக்கிறார்கள்.

இந்திய அணியில் எனக்கு உள்பட யாருக்கும் தானாகவே இடம் கிடைத்து விடாது. இதே போல் யாருக்கும் இடம் உறுதி என்று கூறிவிட முடியாது. தாங்கள் உலகக் கோப்பை அணியில் இடம் பெறப்போகிறோம் என்பது சில வீரர்களுக்கு தெரியும். அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

ஸ்ரேயாஸ் அய்யரும், லோகேஷ் ராகுலும் கடந்த 4 மாதங்களாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. பெரிய அளவில் காயமடைந்து ஆபரேஷன் செய்து இருக்கிறார்கள். நானும் ஒரு முறை காயத்துக்கு ஆபரேஷன் செய்து இருக்கிறேன். காயத்துக்கு பிறகு அணிக்கு திரும்புவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்துள்ளேன். அவர்கள் எந்த அளவுக்கு காயத்தில் இருந்து மீண்டு தயாராக இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

இன்னும் சில தினங்களில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணி தேர்வு செய்யப்பட உள்ளது. வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய விவாதங்கள் இருக்கும். ஆனால் யாருக்கும் அணியில் தானாகவே இடம் கிடைத்து விடாது. ஒவ்வொரு இடத்திற்கும் கடும் போட்டி இருக்கிறது. நிறைய வீரர்களின் பெயர் பரிசீலனையில் உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கு எது சரியான அணி கலவையாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம்.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தரமான அணிக்கு எதிராக நமது சில பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்கு மத்தியில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறேன்.

50 ஓவர் உலகக்கோப்பையை நான் வென்றதில்லை. அதை கையில் ஏந்த வேண்டும் என்பதே எனது கனவாகும். அதற்காகத் தான் நாங்கள் போராடுகிறோம். அதை வெல்வதை விட மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவும் இருக்க முடியாது. உலகக் கோப்பையை தட்டில் வைத்து தந்து விட மாட்டார்கள். உண்மையிலேயே இதற்காக மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். 2011-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை நாங்கள் எல்லோரும் இதற்காகத்தான் போராடி வருகிறோம்.

ஒவ்வொருவரும் களத்திற்கு சென்று வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர். ஏனெனில் நம்மிடம் சிறந்த அணி உள்ளது என்பதை அறிவோம். நமது வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். அவர்களால் இதை செய்ய முடியும் என்ற உள்ளுணர்வும், தன்னம்பிக்கையும் இருக்கிறது.

அணியை வழிநடத்தினாலும் முதலில் நான் ஒரு பேட்டர். அதன் பிறகு தான் கேப்டன். அதனால் அணியில் எனது பங்களிப்பு பேட்டிங்கில் தான் அதிகம் உள்ளது. கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட வேண்டியது தான். அதே நேரத்தில் நான் நிறைய ரன்கள் குவித்து அதன் மூலம் அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும்.

இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கிறோம். சுழற்சி முறையில் அவர்களை பயன்படுத்துகிறோம். இது உலகக் கோப்பை ஆண்டு. ஒவ்வொரு வீரரும் புத்துணர்வுடன் இருக்க வேண்டும். எந்த வீரரும் முக்கியமான போட்டிகளை தவற விடுவதை நாங்கள் விரும்பவில்லை.

இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவரை நான் இரு ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். முதிர்ச்சியான வீரர் போல் செயல்பட்டு வருகிறார். நான் அவரிடம் பேசும் போது, அவர் தனது பேட்டிங்கை நன்கு புரிந்து வைத்திருப்பதை அறிந்து கொண்டேன். பந்தை எங்கு அடிக்க வேண்டும், எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. இந்தியாவுக்கு ஆடிய கடந்த சில ஆட்டகளில் அதை நிரூபித்து காட்டி விட்டார்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.


Next Story