'உலகக் கோப்பையை தக்கவைக்க அணியை நன்றாக கட்டமைத்துள்ளோம்' - இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்


உலகக் கோப்பையை தக்கவைக்க அணியை நன்றாக கட்டமைத்துள்ளோம் - இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்
x

உலகக் கோப்பை தொடர் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.

லண்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. 5-வது சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் 127 ரன்கள் (114 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) சேர்த்தார். பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, 38.2 ஓவர்களில் 211 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறுகையில், 'நாங்கள் ஆட்டத்தில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறோம். எங்களுக்குரிய பாணியில் கிரிக்கெட்டை விளையாடவும், அதற்கு உண்மையாக இருக்கவும் விரும்புகிறேன். டேவிட் மலான் அபாரமாக ஆடி அருமையான சதம் அடித்தார். ஆக்ரோஷமாக ஆடிய அவர் எதிரணி பவுலர்களுக்கு நெருக்கடி அளித்தார். அத்துடன் அவர் ஆட்டத்தை நன்கு புரிந்து செயல்பட்டார்.

நாங்கள் நல்ல ஸ்கோரை எடுத்ததாக நினைத்தேன். விக்கெட் சற்று மெதுவாக இருந்தது. பந்து வீச்சில் நல்ல தொடக்கம் தேவையாக கருதினோம். அதனை செய்து ஆரம்பத்திலேயே விக்கெட்டை வீழ்த்தினோம். மொயீன் அலி, லிவிங்ஸ்டனால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அவர்கள் எங்களது அணியின் பலத்தை அதிகரிக்ககூடியவர்கள்.

நாங்கள் உலகக் கோப்பையை தக்கவைப்பதற்கு நல்ல நிலையில் இருக்கிறோம். அதற்காக அணியை நன்றாக கட்டமைத்துள்ளோம். இந்தியா சென்று உலகக் கோப்பையை வெல்ல முயற்சிப்போம். இதேபோல் மற்ற அணிகளும் வெற்றிக்கு மல்லுக்கட்டும் என்பதால் உலகக் கோப்பை தொடர் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்' என்றார்.


Next Story