விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை சமாளிக்க திட்டமிட்டுள்ளோம் - நேபாள கேப்டன் ரோஹித் பவுடல்

Image Courtesy: AFP
ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன.
பல்லகெலெ,
ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன. முன்னதாக நேற்று முன்தினம் இதே மைதானத்தில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்தியா-நேபாளம் இடையிலான ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இதனிடையே பல்லகெலெவில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் குறித்து நேபாள அணியின் கேப்டன் ரோகித் பௌடேல் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். குறிப்பாக இந்த பெரிய போட்டியில் நேபாள் அணிக்காக இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். அதில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 10 வருடங்களாக அவர்களுடைய நாட்டின் நட்சத்திரங்களாக இருக்கின்றனர்.
எனவே அவர்களை சாய்ப்பதற்காக சில திட்டங்களை வகுத்துள்ள நாங்கள் அதை போட்டியில் வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என்று நம்புகிறேன். இந்த இடத்திற்கு வருவதற்காக எங்களுடைய வீரர்கள் கடந்த 2 – 3 வருடங்களாக கடினமாக உழைத்துள்ளனர். அதனால் தான் நாங்களும் இங்கே இருக்கிறோம்.
கடந்த 2 – 3 தலைமுறைகளாக எங்களுடைய சீனியர்கள் நிறைய முயற்சித்தார்கள். எனவே அவர்களை இந்த போட்டியில் நாங்கள் பிரதிபலிக்கும் வகையில் விளையாட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.