'உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்' பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை


உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்புவோம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை
x

‘உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்’ பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

லாகூர்,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா புறப்படுவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேற்று லாகூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு அணியாக எங்களது மனவலிமை உயர்ந்த நிலையில் இருக்கிறது. நம்பிக்கையுடன் உள்ளோம். எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். களத்தில் சாதிக்க எங்களுக்காக பிரார்த்திக்கும்படி ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் இதற்கு முன்பு இந்தியாவில் விளையாடியதில்லை. அங்குள்ள சீதோஷ்ண நிலை, ஆடுகளத்தன்மை குறித்து ஆராய்ந்துள்ளோம். மற்ற ஆசிய நாடுகளில் உள்ளது போன்ற சூழல் தான் இந்தியாவில் இருப்பதாக அறிகிறோம். அதற்கு ஏற்ப தயாராவோம். உலகக் கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியை கேப்டனாக வழிநடத்த இருப்பது கவுரவமாகும். டாப்-4 இடத்திற்குள் வர வேண்டும் என்பது சிறிய இலக்குதான். சாம்பியனாக தாயகம் திரும்ப வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதை நிறைவேற்றுவோம் என்று நம்புகிறேன்.

ஆமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தின் முன் விளையாட இருப்பது பரவசமூட்டுகிறது. எனது திறமைக்கு ஏற்ப மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்த முயற்சிப்பேன். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தோல்வி அடைந்தாலும் அதில் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story