உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் இல்லாதது வேதனை அளிக்கிறது - இந்திய அணியின் முன்னாள் கேப்டன்
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.
மும்பை,
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் ஆட உள்ளன. இரண்டு முறை உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த முறை உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை.
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வளர்ந்து வரும் அணிகளிடம் தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் நடப்பு உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் தகுதியை இழந்தது. உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறவில்லை.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாதது தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடாதது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்கள் இல்லாத ஒரு உலகக் கோப்பை தொடரை கற்பனை செய்வது கூட கடினம்.
அத்தகைய சிறந்த வீரர்களை உருவாக்கி வைத்திருக்கும் அணி அது. இப்போது அந்த அணி இந்த தொடரில் விளையாட முடியவில்லை என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது
எனக்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கும்போது அவர்கள் எவ்வளவு வேதனையில் இருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவர்கள் இந்த மோசமான நிலையில் இருந்து மீண்டு வருவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.