'நாங்கள் ஆஸ்திரேலியா செல்லும்போது' - ஆடுகளம் விமர்சனம் குறித்து சச்சின் அதிரடி கருத்து...!


நாங்கள் ஆஸ்திரேலியா செல்லும்போது - ஆடுகளம் விமர்சனம் குறித்து சச்சின் அதிரடி கருத்து...!
x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் இன்று நடைபெறுகிறது.

மும்பை,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மிகவும் பிரபல டெஸ்ட் தொடர் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடராகும். கடந்த முறை பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அந்த டெஸ்ட் தொடரை இந்தியா வென்று வரலாறு படைத்தது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இன்று நாக்பூரில் தொடங்குகிறது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட்டுகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில் நாக்பூர் மைதானம் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

நாக்பூர் ஆடுகளம் இந்திய சுழற்பந்துக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இதற்கு இந்திய முன்னாள் வீரர்கள் பதிலடி கொடுத்து வருவதால் இரு அணிகளுக்கும் இடையே பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆரம்பமாகும் முன்பே பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.

இந்நிலையில், நாக்பூர் ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள், முன்னாள் வீரர்களின் விமர்சனங்கள் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நடத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சச்சின் கூறுகையில், நீங்கள் சர்வதேச கிரிக்கெட் வீரராகும்போது உலகின் எந்த ஆடுகளத்திலும் நீங்கள் விளையாட வேண்டும். இது தான் வெளிநாட்டு பயணங்களின்போது உள்ள சவால்கள். நாங்கள் ஆஸ்திரேலியா செல்லும்போது பந்து சுழலும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. ஆடுகளத்தின் தன்மை சிறிய பவுன்சருடன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். அதேபோன்று தான் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது ஆடுகளம் சுழலுக்கு சாதகமானதாகவும், ஆடுகளம் மிகவும் மெதுவானதாக இருக்கும் என்று அவர்களுக்கு தெரியும். பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலிய அணி நன்றாக தயாராகியுள்ளது' என்றார்.


Next Story