தொடரில் முன்னிலை பெறப்போவது யார்.? 3வது டி20 போட்டியில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்


தொடரில் முன்னிலை பெறப்போவது யார்.? 3வது டி20 போட்டியில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்
x

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது.

ஹராரே,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்தில் இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்ததுடன் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

இந்த நிலையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

வெஸ்ட்இண்டீசில் கடந்த மாதம் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்த தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோர் புயல் காரணமாக நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஜிம்பாப்வே தொடரில் முதல் 2 ஆட்டத்தில் விளையாட முடியவில்லை. தற்போது அவர்கள் 3 பேரும் அணியினருடன் இணைந்து இருப்பதால் துருவ் ஜூரெல், சாய் சுதர்சன் தங்களது இடத்தை இழக்கிறார்கள். அத்துடன் பேட்டிங் வரிசையிலும் மாற்றம் செய்யப்படும்.

சிகந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி கடந்த ஆட்டத்தில் கண்ட மோசமான தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளில் கவனம் செலுத்துகிறது. உள்ளூர் ஆடுகளத்தை சாதகமாக பயன்படுத்தி சரிவில் இருந்து மீள முயற்சிப்பார்கள். அதேநேரத்தில் தங்களது அதிரடி ஜாலத்தை நீட்டித்து ஆதிக்கம் செலுத்த இந்திய அணி தீவிரம் காட்டும். இந்திய அணிக்கு சவால் அளிக்க வேண்டும் என்றால் ஜிம்பாப்வே பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என எல்லா துறைகளிலும் துடிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ரியான் பராக் அல்லது ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.

ஜிம்பாப்வே: இன்னசென்ட் கயா, வெஸ்லி மாதவெரே, பிரையன் பென்னட், தியான் மயர்ஸ், சிகந்தர் ராசா (கேப்டன்), ஜோனதன் கேம்ப்பெல், கிளைவ் மடான்டே, வெலிங்டன் மசகட்சா, லூக் ஜாங்வே, முஜரபானி, டெண்டாய் சதரா.

மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story