7வது இடத்தில் களம் இறங்கியது ஏன்..? - ரோகித் சர்மா விளக்கம்


7வது இடத்தில் களம் இறங்கியது ஏன்..? - ரோகித் சர்மா விளக்கம்
x

Image Courtesy: AFP

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 7வது வரிசையில் களம் இறங்கினார்.

பிரிட்ஜ்டவுன்,

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலாவது பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பல மாற்றங்களை கேப்டன் ரோகித் சர்மா மேற்கொண்டார். தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். அடுத்தடுத்த வரிசைகளில் சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூரும், 7வது வரிசையில் கேப்டன் ரோகித் சர்மாவும் களம் இறங்கினர்.

உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்தது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் 7வது இடத்தில் இறங்கியது ஏன்? என கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

முதலில் பந்து வீசி பெரிய இலக்கை துரத்த வேண்டும் என்று நினைத்தோம். ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளம் மோசமாக மாறியது.வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என மூவருக்குமே ஆடுகளம் சாதகமாகதான் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியை இவ்வளவு குறைந்த ரன்களில் நாங்கள் சுருட்டுவோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அவர்களை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தினர்.இலக்கு எளிதாக எட்டக்கூடியது என்பதனால் நான் அணியில் மீண்டும் இணைந்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பை வழங்க நினைத்தேன்.

அந்த வகையில் என்னுடைய பேட்டிங் வரிசையை மாற்றி அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கி பரிசோதித்து பார்க்கலாம் என்று முன்கூட்டியே அனைவரையும் களமிறக்கி விட்டேன். இதுபோன்ற வாய்ப்புகள் ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய கிடைக்காது.

நான் என்னுடைய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தான் பேட்டிங் வரிசையில் ஏழாவது இடத்தில் களமிறங்கினேன். அதன் பிறகு இப்போதுதான் அந்த இடத்தில் விளையாடினேன்.

முகேஷ் குமார் முதல் போட்டியில் நன்றாகவே பந்து வீசினார். டெஸ்ட் போட்டியிலும் அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். இசான் கிஷனுடைய பேட்டிங்கும் நல்ல முறையில் இருந்தது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்தான். மேலும் பந்துவீச்சாளர்கள் அனைவரும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இந்த போட்டியில் வெற்றி கிடைத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story