ராஜஸ்தானின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போடுமா லக்னோ? - இன்று பலப்பரீட்சை


ராஜஸ்தானின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை போடுமா லக்னோ? - இன்று பலப்பரீட்சை
x

லக்னோ அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் வியூகங்களை தீட்டி வருகிறது.

ஜெய்ப்பூர்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த சீசனில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழும் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (ஐதராபாத், டெல்லி, சென்னை, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (பஞ்சாப்புக்கு எதிராக) என்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகிய தொடக்க ஆட்டக்காரர்கள் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

அதே நேரத்தில் அவர்கள் இருவரும் சோபிக்க தவறினாலும் கூட, தங்களால் சாதிக்க முடியும் என்பதை முந்தைய குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன், ஹெட்மயர் ஆகியோரது அதிரடி அரைசதத்தின் மூலம் நிரூபித்து காட்டினர். பேட்டிங்கில் பட்லர் (3 அரைசதத்துடன் 204), ஜெய்ஸ்வால், சாம்சன், ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் (11 விக்கெட்), அஸ்வின், டிரென்ட் பவுல்ட் வலு சேர்க்கிறார்கள். நடப்பு தொடரில் முதல் முறையாக சொந்த ஊரான ஜெய்ப்பூரில் கால்பதிப்பதால் கூடுதல் உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.

லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 3 வெற்றி (டெல்லி, ஐதராபாத், பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்விகளுடன் (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக) 6 புள்ளிகள் எடுத்து 2-வது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோற்ற லக்னோ அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் வியூகங்களை தீட்டி வருகிறது.

சவால்மிக்க ராஜஸ்தான் அணியின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்றால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் லக்னோ ஒருங்கிணைந்து மிரட்ட வேண்டியது அவசியமாகும். லக்னோ அணியில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இன்னும் களம் இறக்கப்படவில்லை. இன்றைய ஆட்டத்தில் கைல் மேயர்சை நீக்கிவிட்டு டி காக்கை சேர்ப்பது குறித்து அந்த அணி நிர்வாகம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா)


Next Story