ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதானது அல்ல, தோனி அதை எளிதானது போல் காட்டிவிட்டார் - ரவி சாஸ்திரி


ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதானது அல்ல, தோனி அதை எளிதானது போல் காட்டிவிட்டார் - ரவி சாஸ்திரி
x

ஐசிசி கோப்பைகளை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல என்று இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்விக்குப் பிறகு ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா நேற்றைய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்திருந்தது. இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத்தொடங்கின.

இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்த நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மீதும், அணியின் தேர்வு குறித்தும், டாஸ் முடிவு குறித்தும் என பல்வேறு வகையில் கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி குறித்து முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றதற்காக முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனிக்கு பாராட்டுகளைத் தெரிவித்த ரவி சாஸ்திரி, ஐசிசி கோப்பைகளை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல, மகேந்திர சிங் தோனி அதை எளிதானது போல் காட்டிவிட்டார் என்றும் தெரிவித்தார்.


Next Story