பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
கேப்டவுன்,
8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று கேப்டவுனில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 150 ரன் இலக்கை ஒரு ஓவர் மீதம் வைத்து இந்திய அணி எட்டியது. ஷபாலி வர்மா (33 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (53 ரன்கள்), ரிச்சா கோஷ் (31 ரன்கள்) கணிசமாக ரன் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர். ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சு எதிர்பார்த்த மாதிரி சிறப்பாக அமையவில்லை. காயத்தால் முதல் ஆட்டத்தில் ஆடாத இந்திய அணியின் துணை கேப்டன் மந்தனா இன்றைய மோதலில் களம் காண வாய்ப்புள்ளது.
ஹேய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் பணிந்தது. வெஸ்ட்இண்டீஸ் நிர்ணயித்த 136 ரன் இலக்கை இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் எளிதில் எட்டியது.
வெஸ்ட்இண்டீஸ் வெற்றி கணக்கை தொடங்கவும், இந்திய அணி தொடர்ந்து 2-வது வெற்றியை ருசிக்கவும் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 12-ல் இந்தியாவும், 8-ல் வெஸ்ட்இண்டீசும் வென்று இருக்கின்றன. 20 ஓவர் உலகக் கோப்பையில் 2 முறை சந்தித்ததில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதும் இதில் அடங்கும்.
இரவு 10.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் பிஸ்மா மரூப் தலைமையிலான பாகிஸ்தான்-லாரா டெலானி தலைமையிலான அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. முதலாவது ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடமும், அயர்லாந்து அணி இங்கிலாந்திடமும் தோல்வியை சந்தித்தன. எனவே முதல் வெற்றிக்கு குறி வைத்து இவ்விரு அணிகளும் மல்லுகட்டுகின்றன. இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் 18 தடவை சந்தித்து இருக்கின்றன. இதில் 14-ல் பாகிஸ்தானும், 4-ல் அயர்லாந்தும் வெற்றி பெற்றன. போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இதற்கிடையே, பார்ல் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 133 ரன் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் 67 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்துக்கு இது 2-வது தோல்வியாகும்.