பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட்: சூப்பர்நோவாஸ் அணி வெற்றி


பெண்கள் சேலஞ்ச் கிரிக்கெட்: சூப்பர்நோவாஸ் அணி வெற்றி
x

பெண்களுக்கான சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது.

புனே,

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முன்னோடியாக கருதப்படும் பெண்களுக்கான சேலஞ்ச் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று தொடங்கியது. 28-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான டிரையல்பிளாசர்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ், தீப்தி ஷர்மா தலைமையிலான வெலோசிட்டி ஆகிய 3 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இதில் நேற்று இரவு நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ்- நடப்பு சாம்பியன் டிரையல்பிளாசர்ஸ் அணிகள் மோதின. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த சூப்பர்நோவாஸ் அணி 20 ஓவர்களில் 163 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன்னும், ஹர்லீன் டியோல் 35 ரன்னும் (19 பந்து, 5 பவுண்டரி), டியேந்திர டோட்டின் 32 ரன்னும் (17 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். டிரையல்பிளாசர்ஸ் அணி தரப்பில் ஹாய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டும், சல்மா காதுன் 2 விக்கெட்டும். பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டிரையல்பிளாசர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 114 ரன்களே எடுத்தது. இதனால் சூப்பர்நோவாஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் மந்தனா 34 ரன்கள் சேர்த்தார். சூப்பர்நோவாஸ் தரப்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ்-வெலோசிட்டி அணிகள் சந்திக்கின்றன.


Next Story