'பெண்கள் பிரீமியர் லீக்'மார்ச் 4ம் தேதி தொடக்கம் - வீராங்கனைகள் ஏலம் வரும் 13ம் தேதி நடைபெறும்...!
பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது.
மும்பை,
ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதே போல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரீமியர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த 5 அணிகளின் ஏலம் மூலமாக பிசிசிஐ 4669.99 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த 5 அணிகள் ஏலம் எடுத்த விவரம் வருமாறு:-
1. அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் - ரூ. 1,289 கோடி - அகமதாபாத்
2. இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 912.99 கோடி - மும்பை
3. ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 901 கோடி - பெங்களூரு
4. ஜே.எஸ்.டபிள்யூ ஜிஎம்ஆர் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் - ரூ. 810 கோடி - டெல்லி
5. கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் - ரூ. 757 கோடி - லக்னோ
இந்நிலையில் இந்த பெண்கள் பிரிமீயர் லீக் எப்போது தொடங்கும் என்ற விவரத்தை ஐ.பி.எல். சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார். இது தொடரபாக அவர் கூறும்போது, பெண்கள் பிரிமீயர் லீக் மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை மும்பையில் தொடங்குகிறது. வருகிற 13ம் தேதி வீராங்கனைகள் ஏலம் மும்பையில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்கள் முதல் 18 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கலாம். அணியில் மொத்தம் 5 வெளிநாட்டு வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கலாம், அந்த 5 பேரில் 1 அசோசியேட் வீராங்கனையை தேர்வு செய்யலாம். மொத்தம் 22 போட்டிகள்
நடைபெறும். புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2 மற்றும் 3வது இடங்களை பிடிக்கும் அணிகள் தங்களுக்குள் மோதி அதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டிக்கு முன்னேறும்
இவ்வாறு அவர் கூறினார்.