பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து 'ஹாட்ரிக்' வெற்றி


பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி
x

பெண்கள்20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.

கெபேஹா,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் கெபேஹாவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 29 ரன்னில் (4.4 ஓவரில்) 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த நாட் சிவெர் (50 ரன்கள்), கேப்டன் ஹீதர் நைட் (28 ரன்கள்), அமி ஜோன்ஸ் (40 ரன்கள்) ஆகியோர் நிலைத்து நின்று ஆடி அணி நல்ல நிலையை எட்ட வழிவகுத்தனர். 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. சோபி எக்லெஸ்டோன் 11 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். இது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

இங்கிலாந்து 'ஹாட்ரிக்' வெற்றி

பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 140 ரன்களே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 52 ரன்னும் (41 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரிச்சா கோஷ் ஆட்டம் இழக்காமல் 47 ரன்னும் (34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஜொலிக்கவில்லை. அரைசதம் அடித்த இங்கிலாந்து வீராங்கனை நாட் சிவெர் ஆட்டநாயகி விருது பெற்றார்.

தொடர்ந்து 3-வது வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி ஏறக்குறைய அரைஇறுதியை உறுதி செய்தது. முதல் தோல்வியை சந்தித்த இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை அயர்லாந்தை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் தான் அரைஇறுதியை எட்ட முடியும்.

வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

முன்னதாக நேற்று முன்தினம் கேப்டவுனில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்து அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது. நியூசிலாந்து நிர்ணயித்த 190 ரன் இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி 8 விக்கெட்டுக்கு 118 ரன்னில் அடங்கியது. 81 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்த நியூசிலாந்து தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் ஆட்டநாயகி விருது பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை சொந்தமாக்கியது. முதலில் ஆடிய அயர்லாந்து அணி 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி ஒரு பந்து மீதம் வைத்து இலக்கை எட்டிப்பிடித்தது.

கடைசி வரை நிலைத்து நின்று ஆடி அணி வெற்றி இலக்கை கடக்க உதவிய வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹேய்லி மேத்யூஸ் ஆட்டநாயகி விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி சர்வதேச 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் சந்தித்த தோல்வி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இன்றைய ஆட்டங்கள்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) பார்ல் நகரில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் (மாலை 6.30 மணி) நியூசிலாந்து-இலங்கை (இரவு 10.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story