அணியில் அதிக ஆல்-ரவுண்டர்கள் இருப்பது முக்கியம் - மிட்செல் மார்ஷ்


அணியில் அதிக ஆல்-ரவுண்டர்கள் இருப்பது முக்கியம் - மிட்செல் மார்ஷ்
x

கோப்புப்படம் AFP

உலகக் கோப்பை போட்டி ரன்மழை பொழியப்படும் போட்டியாக இருக்கப்போகிறது என்று மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.

மும்பை,

ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் 31 வயதான மிட்செல் மார்ஷ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'நிறைய ஆல்-ரவுண்டர்கள் இருப்பதால் தான் எங்களது அணி சரியான கலவையில் அமைந்துள்ளது. இத்தகைய வரிசையுடன் அணியை கட்டமைப்பது மிகவும் முக்கியம். இதன் மூலம் பேட்டிங் வரிசை வலுப்படுவதுடன், தேவைக்கு ஏற்ப பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

கடந்த காலங்களில் உண்மையிலேயே மிகச்சிறந்த அணிகளை எடுத்துக் கொண்டால், உதாரணமாக இங்கிலாந்து அணியில் 8-வது வரிசையில் ஆடுபவரும் தரமான பேட்ஸ்மேனாக இருப்பார். இது தான் மிகப்பெரிய ஸ்கோரை குவிப்பதற்கோ அல்லது பெரிய ஸ்கோரை விரட்டிப்பிடிப்பதற்கோ உதவிகரமாக இருக்கிறது.

இந்த தொடர் அதிக ரன்கள் குவிக்கப்படும் தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன். இதே போல் இன்னும் 6 மாதங்களில் வர உள்ள உலகக் கோப்பை போட்டியும், ரன்மழை பொழியப்படும் போட்டியாக இருக்கப்போகிறது என்பதே எனது கணிப்பு.

தற்போது இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்வதில் கவனம் செலுத்துவதே முக்கியம். இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எப்போதும் கடினம். இந்திய ஒரு நாள் போட்டி அணி அருமையானது. உள்ளூரில் நன்றாக ஆடி வருகிறார்கள். நாங்களும் சிறந்த வீரர்களை கொண்ட அணி தான். அதனால் இது சவால்மிக்க போட்டியாக இருக்கும்.

கணுக்கால் காயத்துக்கு ஆபரேஷன் செய்து அதில் இருந்து மீண்டு வந்துள்ளேன். இந்த தொடரில் ஒரு பேட்டராக மட்டுமே ஆடுவேன். மறுபடியும் பந்து வீசுவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும்' என்றார்.


Next Story