பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து இன்சமாம் ராஜினாமா


பாகிஸ்தான்  கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து இன்சமாம் ராஜினாமா
x
தினத்தந்தி 30 Oct 2023 3:12 PM GMT (Updated: 30 Oct 2023 3:30 PM GMT)

பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அதன் காரணமாகவே இன்சமாம் உல் ஹக் ராஜினாமா செய்து இருக்கலாம் என பலரும் நினைத்த நிலையில், வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 உலகக்கோப்பை தொடரில் மோசமாக விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த அணியின் தேர்வுக்குழு தலைவர் ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று இன்சமாம் உல் ஹக் ராஜினாமா செய்து இருக்கலாம் என பலரும் நினைத்த நிலையில் வேறு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு கிளம்பும் முன் தங்கள் நாட்டின் கிரிக்கெட் அமைப்புடன் மோதல் போக்கை கடைபிடித்தது. தங்களுக்கு விளம்பர வருவாயில் பங்கு அளிக்க வேண்டும் என்றும், கூடுதல் சம்பளம் மற்றும் தங்களுக்கு சாதகமான ஒப்பந்தம் அளிக்க வேண்டும் என்றும் போர்க்கொடி உயர்த்தினர்.

உலகக்கோப்பை தேதிகள் நெருங்கியதால் வேறு வழியின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவர்கள் கேட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொடுத்தது. அப்போது கிரிக்கெட் அமைப்புக்கும், வீரர்களுக்கும் இடையே பாலமாக செயல்பட்டவர் இன்சமாம் உல் ஹக் தான். அப்போதே அவர் மீது கிரிக்கெட் அமைப்பு நிர்வாகிகளுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது முன்னணி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் விளம்பர ஏஜென்ட்டாக இருக்கும் தல்ஹா ரெஹ்மானி என்பவரின் நிறுவனமான யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட்-இல் இன்சமாம் உல் ஹக் பங்குதாரராக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக இன்சமாம் உல் ஹக் விளம்பர ஒப்பந்தத்தில் இடம் பெறும் வீரர்களுக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கக் கூடும் என்ற புகார் எழுந்தது.

தற்போது அந்த விளம்பர ஏஜென்ட் பாபர் அசாம், ஷஹீன் ஷா அப்ரிடி, முகமது ரிஸ்வான் ஆகியோரின் விளம்பர ஒப்பந்தங்களை நிர்வகித்து வருகிறார். பாகிஸ்தான் அணியும் உலகக்கோப்பை தொடரில் மோசமாக செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து இனியும் இன்சமாம் உல் ஹக் தேர்வுக் குழு தலைவர் பதவியில் இருந்தால் சரியாக இருக்காது என முடிவு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அவருக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.


Next Story