உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி போட்டி இன்று தொடக்கம்: முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடக்கிறது
உலகக் கோப்பை கிரிக்கெட் பயிற்சி போட்டி இன்று தொடங்குகிறது.
ஐதராபாத்,
பாகிஸ்தான் அணி
10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இதையொட்டி அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி ஆட்டங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்பாடு செய்துள்ளது. உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடக்கின்றன.
ஐதராபாத்தில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 7 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வரவேற்பு அளித்ததை கண்டு பாகிஸ்தான் வீரர்கள் நெகிழ்ந்து போனார்கள். 'ஐதராபாத்தில் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் திகைக்க வைத்தது' என்று பாபர் அசாம் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அவர்கள் கிட்டத்தட்ட 2 வாரம் ஐதராபாத்தில் தங்குகிறார்கள். வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உடனடியாக பயிற்சியை தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் முனைப்புடன் உள்ளனர். ஏனெனில் அந்த அணி உலகக் கோப்பையின் தனது முதல் ஆட்டத்தை இங்கு தான் (6-ந்தேதி நெதர்லாந்துக்கு எதிராக) விளையாடுகிறது. வலை பயிற்சியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு உதவுவதற்கு பயிற்சி பவுலராக உள்ளூரைச் சேர்ந்த 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் நிஷாந்த் சரணு அழைக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியில் காயத்தால் கடந்த மார்ச் 31-ந்தேதிக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடாத கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் களம் காண வாய்ப்புள்ளது. பயிற்சி போட்டி என்றாலும் முழு உத்வேகத்துடன் ஆடுவதற்கு நியூசிலாந்து வீரர்கள் தயாராக உள்ளனர்.
பண்டிகை காலம் என்பதால் பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்று உள்ளூர் போலீசார் ஏற்கனவே கூறி விட்டனர். இதனால் இந்த ஆட்டத்திற்கு ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.
தாயகம் திரும்பிய தென்ஆப்பிரிக்க கேப்டன்
திருவனந்தபுரத்தில் நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா, குடும்ப விஷயம் காரணமாக அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார். இதனால் இரு பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார். முதல் போட்டிக்கு முன்பாக அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பயிற்சி போட்டிக்கு அந்த அணியை மார்க்ரம் வழிநடத்த உள்ளார். பவுமா இல்லாததால் குயின்டான் டி காக்குடன் ரீஜா ஹென்ரிக்ஸ் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று தெரிகிறது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.
மூன்று ஆட்டங்களும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் நாளை இங்கிலாந்துடன் கவுகாத்தியில் மோதுகிறது.