உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி...நெதர்லாந்து அணியை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்...!
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தர்மசாலா,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 38 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திய நெதர்லாந்து அணிக்கு பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்திய நெதர்லாந்து அணிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
இந்த உலகக் கோப்பை தொடரானது பல்வேறு சுவாரசியமான முடிவுகளை தந்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் அந்த அணி 140 ரன்களுக்கு 7 விக்கெட் இருந்தபோது போராடி பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றதை பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.
மேலும் இந்த போட்டியில் நெதர்லாந்து அணி வீரர்கள் எளிதில் ரன்களை விட்டுக் கொடுக்காமல் தென்னாப்பிரிக்க அணி வீரர்களை அழுத்தத்திற்கு கொண்டு வந்து களத்தில் சிறப்பாக செயல்பட்டதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், இந்த வெற்றியை அவர்கள் மறக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.