உலகக்கோப்பை இறுதிப்போட்டி: பும்ரா ஓவரில் கள நடுவர் அளித்த தீர்ப்பால் இந்திய ரசிகர்கள் ஆதங்கம்


உலகக்கோப்பை இறுதிப்போட்டி: பும்ரா ஓவரில் கள நடுவர் அளித்த தீர்ப்பால் இந்திய ரசிகர்கள் ஆதங்கம்
x
தினத்தந்தி 19 Nov 2023 8:02 PM GMT (Updated: 20 Nov 2023 12:26 AM GMT)

இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு "அம்பயர்ஸ் கால்" முடிவும் முக்கிய காரணம் என கூறி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அகமதாபாத்,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 ஆவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 3-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இதனால், இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

இந்த போட்டியில் துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாடினாலும், பின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 22.1 ஓவரில் 79 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 28-வது ஓவரின் 5-வது பந்தை பும்ரா வீசினார்.

லபுஷேன் எதிர்கொண்ட இந்த பந்து, அவரின் பேட்-ஐ தாக்கியது. விக்கெட் கிடைத்த உற்சாகத்தில் பும்ரா மற்றும் இந்திய வீரர்கள் விக்கெட் கேட்டு நடுவரிடம் முறையிட்டனர். எனினும், அவர் செவி கொடுக்காமல் விக்கெட் தர மறுத்தார். உடனே இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரிவ்யூ கேட்டார்.

மூன்றாவது நடுவர், இந்த பந்தை ரி-பிளே செய்து பார்த்தார். அதில் பந்து லபுஷேன் பேட்-இல் படாமல், நேரடியாக அவரது பேட்-இல் பட்டது தெளிவாக உறுதி செய்யப்பட்டது. மேலும் பந்து ஸ்டம்ப்களையும் பதம் பார்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்றாம் நடுவர் களத்தில் இருந்த அம்பயரின் முடிவே இறுதியானது என்பதை தெரிவிக்கும் வகையில் "அம்பயர்ஸ் கால்" என்ற தீர்ப்பை வழங்கினார்.

போட்டியின் இந்த சூழலில் இந்திய அணி விக்கெட்டை வீழ்த்த போராடி வந்த நிலையில், அம்பயர்ஸ் கால் முடிவால் விக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. இதன் பிறகு வேகம்பிடித்த லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஜோடி, வெற்றி இலக்கை எட்டியது. இந்த நிலையில், போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு "அம்பயர்ஸ் கால்" முடிவும் முக்கிய காரணம் என கூறி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story