உலகக்கோப்பை இறுதிப்போட்டி- சென்னையில் பொது இடங்களில் திரையிட ஏற்பாடு
சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை பொது வெளியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்,
10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இறுதிப்போட்டியை நேரில் காண ரசிகர்கள் அகமதாபாத்திற்கு படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை மக்கள் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண பொது வெளியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.