உலக கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு..!


உலக கோப்பை:  அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தானுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு..!
x

Image: AFP

நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

பெங்களூரு,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.இதில் இன்று நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா அதிரடியாக ஆடி 25 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 51 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் போராடிய தீக்ஷனா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 3 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னர், ரவீந்திரா ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக டேவான் கான்வே , ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்கினர்.தொடக்கம் முதல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். தொடக்க விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் கான்வே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.இதனால் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகும்.

பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் சனிக்கிழமை மோதவுள்ளது.

பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்தை 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது இங்கிலாந்து அணி கொடுக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற வேண்டும்.

2.3 ஓவர்களில் இலக்கை எட்டுவது நடக்காத விஷயம். வேண்டும் என்றால் முதலில் பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்தை 112 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளது. ஆப்கானிஸ்தான் -0.338 ரன்ரேட்டில் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகும்.


Next Story