உலகக் கோப்பை தகுதி சுற்று: அணிகளின் தற்போதைய நிலை என்ன..?


உலகக் கோப்பை தகுதி சுற்று: அணிகளின் தற்போதைய நிலை என்ன..?
x

ஸ்காட்லாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியதுடன் அந்த அணியின் உலகக் கோப்பை போட்டி கனவையும் சிதைத்தது.

புலவாயோ,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. லீக் முடிவில் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்த 6 அணிகள் தற்போது மோதுகின்றன. இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைப்பதுடன் இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.

இந்த நிலையில் புலவாயோவில் நேற்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜிம்பாப்வே-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ்டோபர் மெக்பிரிட், மேத்யூ கிராஸ் களம் இறங்கினர். நிதானமாக ஆடிய மெக்பிரிட் 28 ரன்னிலும், மேத்யூ கிராஸ் 38 ரன்னிலும் போல்டாகி வெளியேறினர். அடுத்து வந்த பிரன்டன் மெக்முல்லன் (34 ரன்கள்), ஜார்ஜ் முன்சி (31 ரன்கள்), மைக்கேல் லீஸ்க் (48 ரன்கள்) சிறப்பாக ஆடி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார்கள். இதற்கிடையே கேப்டன் ரிச்சி பெரிங்டன் (7 ரன்), கிறிஸ் கிரீவ்ஸ் (1 ரன்) விரைவில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

235 ரன் இலக்கு

50 ஓவர்களில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட்டுக்கு 234 ரன்கள் சேர்த்தது. மார்க் வாட் 21 ரன்னுடனும், சப்யான் ஷாரிப் 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டும், சதரா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜாய்லார்ட் கும்பி ரன் ஏதுமின்றியும், கேப்டன் கிரேக் எர்வின் 2 ரன்னிலும், இன்னோசன்ட் கயா 12 ரன்னிலும், சீன் வில்லியம்ன்ஸ் 12 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். இதனால் அந்த அணி 37 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை (7.5 ஓவர்) இழந்து தடுமாறியது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகம் வரை பந்து வீசிய கிறிஸ் சோல் அவர்களை மிரள வைத்தார்.



ஸ்காட்லாந்து வெற்றி

சற்று நேரம் தாக்குப்பிடித்த சிகந்தர் ராசா 34 ரன்னில் (40 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிறிஸ் கிரீவ்சின் சுழலில் சிக்கினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ரையான் பர்ல் அணியை வெற்றியை நோக்கி நகர்த்த போராடினார். அவருடன் இணைந்த வெஸ்லி மாதேவிர் (40 ரன், 39 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர யாரும் நிலைக்கவில்லை. நிலைத்து நின்று ஆடிய ரையான் பர்ல் 83 ரன்னில் (84 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) மைக்கேல் லீஸ்க் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 41.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 203 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து தரப்பில் கிறிஸ் சோல் 3 விக்கெட்டும், பிரன்டன் மெக்முல்லன், மைக்கேல் லீஸ்க் தலா 2 விக்கெட்டும், சப்யான் ஷாரிப் , மார்க் வாட், கிறிஸ் கிரீவ்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ஸ்காட்லாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் சோல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வாய்ப்பை இழந்தது ஜிம்பாப்வே

சூப்பர் சிக்ஸ் சுற்றில் தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்த ஸ்காட்லாந்து அணி இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. அதே சமயம் தனது கடைசி ஆட்டத்தில் ஆடிய ஜிம்பாப்வே சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் இறுதி சுற்று வாய்ப்பை இழந்த ஜிம்பாப்வேக்கு, உலகக் கோப்பை போட்டி கனவும் கலைந்தது. தொடர்ந்து 2-வது முறையாக அந்த அணி உலகக் கோப்பை வாய்ப்பை தவற விடுகிறது.

6 புள்ளி பெற்று இருந்தாலும் ஜிம்பாப்வே ரன் ரேட்டில் (-0.099) ஸ்காட்லாந்தை (6 புள்ளி, ரன்-ரேட் +0.296) விட பின்தங்கி இருப்பதால் இனி வாய்ப்பில்லை.

நாளைய போட்டி

ஸ்காட்லாந்து அணி தனது கடைசி சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) நெதர்லாந்தை (4 புள்ளி, ரன்-ரேட் -0.042) சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால் 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மாறாக நெதர்லாந்து வெற்றி பெற்றால் இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும் என்பதால் இறுதிப்போட்டியை எட்டுவது யார் என்பதை ரன்-ரேட் தான் முடிவு செய்யும். இந்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மோசமான தோல்வியை தழுவாமல் இருந்தாலே இறுதிப்போட்டிக்குள் நுழைய முடியும்.

இன்றைய போட்டி

இன்றைய ஆட்டத்தில் ஓமன்-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் (பகல் 12.30 மணி) மோதுகின்றன. இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்ட இவ்விரு அணிகள் இடையிலான மோதல் தொடரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.


Next Story