உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் - எல்.பாலாஜி பேச்சு


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் - எல்.பாலாஜி பேச்சு
x

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியாவுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என்று சூப்பர் கிங்ஸ் அகாடமி தொடக்க விழாவில் முன்னாள் வீரர் எல்.பாலாஜி கூறினார்.

நெல்லை,

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சார்பில் சென்னை துரைப்பாக்கம் மற்றும் சேலம் வாழப்பாடி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், திருச்சி ஆகிய இடங்களில் ஏற்கனவே சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது 5-வது அகாடமி நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். ஸ்டேடியத்தில் அமைக்கப்படுகிறது. 12 பிட்ச் மற்றும் மின்னொளி என்று அனைத்து விதமான வசதிகளும் செய்யப்படுகிறது.

சூப்பர் கிங்ஸ் அகாடமியை இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். தொடக்க விழா நிகழ்ச்சி சங்கர் நகரில் உள்ள ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. மாணவர்கள் மத்தியில் எல்.பாலாஜி பேசும் போது கூறியதாவது:-

நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய போது நகரங்களில் மட்டும் தான் கிரிக்கெட்டுக்கான வசதி வாய்ப்புகள் இருந்தன. மாவட்டங்களில் எப்போது கிரிக்கெட்டுக்கான சகல வசதிகளும் சென்றடையும் என்று யோசித்துக் கொண்டு இருப்பேன். அந்த நீண்ட நாள் கனவு இன்று சூப்பர் கிங்ஸ் அகாடமியின் முயற்சிகளால் சாத்தியமாகியுள்ளன. மாவட்டங்களில் உள்ள இளம் வீரர்கள் இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களை திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலைமையில் கிராமங்களில் இருந்தும் நிறைய கிரிக்கெட் வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கான வசதிகள் அதிக அளவில் உள்ளது. சேலத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கடந்து வந்த பாதை மிகப்பெரியது. அதுவே அவருக்கான வெற்றியாகும். காயங்களால் அவதிப்படும் அவர் அதை தாண்டி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பார். வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைவது கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதது ஆகும். அத்தகைய சூழலில் தான் நடராஜன் இருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட் தான் வீரர்களின் உண்மையான திறமையை அடையாளம் காணும் போட்டி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்று இந்திய அணிக்கு நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும். என்றாலும் இந்திய அணியில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ், முகமது ஷமி உள்ளிட்டோரும், திறமையான பேட்ஸ்மேன்களும் இருப்பதால் இறுதிப்போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு பாலாஜி கூறினார்.

நிகழ்ச்சியில் சூப்பர் கிங்ஸ் அகாடமியின் ஆபரேட்டிங் தலைவர் லூயி மரியானோ, சங்கர் நகர் இந்தியா சிமெண்ட்ஸ் ஆலை தலைவர் சரவணமுத்து, நெல்லை கிரிக்கெட் சங்க செயலாளர் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெல்லை அகாடமியில் 6 வயது முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் சங்கர் நகர் கிரிக்கெட் மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் அகாடமி நடத்த உள்ள கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். அடுத்த மாதம் முதல் இங்கு பயிற்சி அளிக்கப்படும்.


Next Story