உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்? - இந்தியா உள்பட 4 அணிகளுக்கு வாய்ப்பு
இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மட்டுமே நீடிக்கின்றன.
துபாய்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை குறைந்தது 3-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டிய நெருக்கடியுடன் சவாலை தொடங்குகிறது.
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 9 அணிகள் பங்கேற்றுள்ளன. குறிப்பிட்ட இரு நாட்டு தொடர்களின் முடிவுகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இதில் டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளியும், டிராவுக்கு 4 புள்ளியும் வழங்கப்படுகிறது. மொத்தம் எடுக்கும் புள்ளிகள் சதவீதமாக கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இறுதிபோட்டி ஜூன் மாதம் லண்டனில் நடைபெறுகிறது.
தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 58.93 சதவீத புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மட்டுமே நீடிக்கின்றன. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, இங்கிலாந்து உள்பட 5 அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன.
இந்த சீசனில் இன்னும் இந்தியா-ஆஸ்திரேலியா (4 டெஸ்ட்), தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் (2 டெஸ்ட்), இலங்கை-நியூசிலாந்து (2 டெஸ்ட்) ஆகிய தொடர்கள் எஞ்சியுள்ளன. இதன் முடிவில் டாப்-2 இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழையும் இரு அணிகள் எவை என்பது தீர்மானிக்கப்படும்.
யார்-யாருக்கு எப்படி வாய்ப்புள்ளது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்:-
ஆஸ்திரேலியா: 75.56 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்த அணி கிட்டத்தட்ட இறுதிசுற்றை எட்டி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவுக்கு எதிரான 4 டெஸ்டுகளில் ஒன்றில் 'டிரா' செய்தாலே இறுதிப்போட்டியை உறுதி செய்து விடலாம். அதே சமயம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் முழுமையாக பறிகொடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெல்லும் பட்சத்தில் ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் 3-வது இடத்துக்கு சரிந்து இறுதி சுற்று வாய்ப்பை இழக்க நேரிடும். அத்துடன் தாமதமாக பந்துவீசும் புகாரில் சிக்கி புள்ளியை அபராதமாக இழக்காமல் இருப்பதும் முக்கியமாகும்.
இந்தியா: 58.93 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள நமது அணி நாளை மறுதினம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை குறைந்தது 3-1 அல்லது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சிக்கலின்றி முன்னேற முடியும். இல்லாவிட்டால் மற்ற தொடர்களின் முடிவை சார்ந்து இருக்க வேண்டி இருக்கும். தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடியும் பட்சத்தில், நியூசிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தினால் இந்தியாவின் இறுதிப்போட்டி கனவு தகர்ந்து விடும்.
இலங்கை: 53.33 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள இலங்கை அணி அடுத்த மாதம் 9-ந்தேதி கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் போது அதன் சதவீத புள்ளி 61.11 சதவீதமாக அதிகரிக்கும். அதன் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கில் தோற்கடிக்க வேண்டும் அல்லது தொடர் சமனில் முடிய வேண்டும் அல்லது ஆஸ்திரேலிய அணி இந்தியாவை சாய்க்க வேண்டும். இவ்வாறு நடந்தால் டாப்-2 இடத்திற்குள் இலங்கை வந்து விடும். ஒரு வேளை நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமன் செய்தால், அதன் பிறகு மற்ற இரு நாட்டு தொடர்களின் முடிவை பொறுத்து இலங்கையின் வாய்ப்பு அமையும்.
தென்ஆப்பிரிக்கா: கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் தோற்றதால் தென்ஆப்பிரிக்காவின் இறுதிப்போட்டி வாய்ப்பு மங்கி போய் விட்டது. 48.72 சதவீத புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ள அந்த அணி முதலில் சொந்த மண்ணில் நடக்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும். அப்போது அந்த அணியின் புள்ளி 55.56 சதவீதமாக உயரும். அதன் பிறகு நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை ஒன்றில் தோற்க வேண்டும். இதே போல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்க வேண்டும். அல்லது 1-1 என்று சமனில் முடிந்தாலும் பிரச்சினை இல்லை. இப்படி எல்லா முடிவுகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே தென்ஆப்பிரிக்காவுக்கு இறுதிப்போட்டிக்கான கதவு திறக்கும்.