இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 2-வது வெற்றி


இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 2-வது வெற்றி
x
தினத்தந்தி 18 July 2023 1:59 AM IST (Updated: 18 July 2023 2:07 AM IST)
t-max-icont-min-icon

இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்து அரைஇறுதியை உறுதி செய்தது.

கொழும்பு,

இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. நேற்று நடந்த 'பி' பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நேபாள அணி 39.2 ஓவர்களில் 167 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் பாடெல் 65 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் நிஷாந்த் சிந்து 4 விக்கெட் டும், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர் 3 விக்கெட்டும், ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இந்திய அணி 22.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 87 ரன்கள் (69 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். சாய் சுதர்சன் 58 ரன்னுடனும் (52 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), துருவ் ஜூரெல் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்து அரைஇறுதியை உறுதி செய்தது. முதலாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வென்று இருந்தது. நேபாள அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 184 ரன் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரத்தை பந்தாடி 2-வது வெற்றியை தனதாக்கி அரைஇறுதியை எட்டியது. இந்திய அணி கடைசி லீக்கில் பாகிஸ்தானை நாளை (பிற்பகல் 2 மணி) சந்திக்கிறது.


Next Story