ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் - யுஸ்வேந்திர சாஹல் சாதனை


ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் - யுஸ்வேந்திர சாஹல் சாதனை
x

image courtesy: Rajasthan Royals twitter

ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் சாஹல் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

கொல்கத்தா,

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக ஐதராபாத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் அள்ளியதன் மூலம் ஐ.பி.எல் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சென்னை அணியின் முன்னாள் வீரர் வெய்ன் பிராவோவின் (183 விக்கெட்) சாதனையை சாஹல் சமன் செய்தார்.

இந்த நிலையில் இன்றைய போட்டியின் 11-வது ஓவரில் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் சாஹல், பிராவோவை முந்தி முதலிடம் பிடித்தார். அதன்பின்னர் மேலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் சாஹல் 187 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து பிராவோ 183 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், பியூஷ் சாவ்லா 174 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும், அமித் மிஷ்ரா 172 விக்கெட்டுகளுடன் நான்காம் இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 171 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.


Next Story