20 ஓவர் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்தியர் - யுஸ்வேந்திர சாஹல் சாதனை


20 ஓவர் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்தியர் - யுஸ்வேந்திர சாஹல் சாதனை
x

image courtesy: Yuzvendra Chahal twitter

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணி 72 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடி வெற்றியுடன் தொடங்கியது.

ஐதராபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், 'பி' பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவு அணிகளுடன் தலா 2 முறையும் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த 4-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மல்லுக்கட்டின. 'டாஸ்' ஜெயித்த ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர்குமார் முதலில் ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதையடுத்து ஜோஸ் பட்லரும், யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்து, ஐதராபாத்தின் பந்து வீச்சை வெளுத்து கட்டினர். வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் 2 சிக்சர் விளாசிய பட்லர், டி.நடராஜனின் ஓவரில் 4 பவுண்டரி தெறிக்க விட்டார். இதனால் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. 6-வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த பட்லர் 54 ரன்களில் (22 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) பசல்ஹக் பரூக்கியின் பந்து வீச்சில் போல்டு ஆனார். 'பவர்-பிளே'யான முதல் 6 ஓவர்களில் ராஜஸ்தான் 85 ரன் திரட்டியது. ஐ.பி.எல். வரலாற்றில் பவர்-பிளேயில் ராஜஸ்தானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி காட்ட ரன்ரேட் 10-க்கு குறையாமல் நகர்ந்தது. ஸ்கோர் 139 ஆக உயர்ந்த போது ஜெய்ஸ்வால் 54 ரன்களில் (37 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார். இடையில் சில வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினாலும், கேப்டன் சாம்சன் நிலைத்து நின்று அரைசதம் அடித்து (55 ரன், 32 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) அணிக்கு மேலும் வலுவூட்டினார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் 200-ஐ கடந்த முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றது.

பின்னர் 204 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் 'செக்' வைத்தார். அவரது பந்து வீச்சில் அபிஷேக் ஷர்மா (0), ராகுல் திரிபாதி (0) காலியானார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து ஐதராபாத் மீள்வதற்குள் ரூ.13¼ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு முதல் முறையாக ஐ.பி.எல்.-ல் கால்பதித்த ஹாரி புரூக் 13 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன்னிலும் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு தடம்புரண்ட ஐதராபாத்தால் நிமிர முடியவில்லை. ஒரு கட்டத்தில் 81 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த அந்த அணி மூன்று இலக்கத்தையாவது தொடுமா என்ற கேள்வி எழுந்தது. நல்லவேளையாக தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் விதிமுறைப்படி மாற்று வீரராக களம் கண்ட அப்துல் சமத் தாக்குப்பிடித்து விளையாடி அந்த கவுரவத்தை காப்பாற்றினார்.

20 ஓவர்கள் முழுமையாக ஆடிய ஐதராபாத் அணி 8 விக்கெட்டுக்கு 131 ரன்னில் முடங்கியது. இதன் மூலம் ராஜஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்துல் சமத் 32 ரன்களுடனும், உம்ரான் மாலிக் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ஐதராபாத் வீரர் ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்திய போது அது ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் அவரது 300-வது விக்கெட்டாக (265 ஆட்டம்) அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை சாஹல் படைத்தார். அவர் நேற்று எடுத்த 4 விக்கெட்டையும் சேர்த்து ஐ.பி.எல்.-ல் இதுவரை 170 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் அதிக விக்கெட் எடுத்தவர்களின் வரிசையில் ஓய்வு பெற்ற வெய்ன் பிராவோ (183 விக்கெட்), மலிங்கா (170 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் சாஹல் உள்ளார்.

ராஜஸ்தான் அணியில் முதல் 3 வீரர்களான பட்லர், ஜெய்ஸ்வால், சாம்சன் ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் டாப்-3 வரிசை வீரர்கள் ஒரு சேர 50 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 4-வது நிகழ்வாகும்.


Next Story