லா லிகா கால்பந்து ரியல் மாட்ரிட் அணிக்கு 19–வது வெற்றி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது


லா லிகா கால்பந்து ரியல் மாட்ரிட் அணிக்கு 19–வது வெற்றி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது
x
தினத்தந்தி 13 March 2017 9:55 PM GMT (Updated: 13 March 2017 9:54 PM GMT)

லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 19–வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

சான்டியாகோ,

ஸ்பெயினில் நடைபெறும் கிளப் அணிகளுக்கு இடையிலான லா லிகா கால்பந்து போட்டி பிரபலமானதாகும். இந்த ஆண்டுக்கான 86–வது லா லிகா கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை (உள்ளூர், வெளியூர் அடிப்படையில்) மோத வேண்டும்.

மே 21–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி தொடரில் 32 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் பெடிஸ் அணியை எதிர்கொண்டது.

சுயகோல்

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 24–வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி சுயகோல் வாங்கியது. ரியல் பெடிஸ் வீரர் அன்டோனியா சனாபரியா அடித்த பந்தை ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் கெய்லோர் நவாஸ் தடுத்த பிறகு, தவறுதலாக கோல் வலைக்குள் தள்ளி விட்டதால் அது சுயகோலாக மாறியது.

41–வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி இந்த கோலை அடித்தார். இந்த சீசனில் அவர் அடித்த 26–வது கோல் இது. முதல் பாதியில் இரு அணிகளும் 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

ரியல் மாட்ரிட் வெற்றி

ரியல் மாட்ரிட் அணி கேப்டன் செர்ஜியோ ரமோஸ் 81–வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த சீசனில் அவர் அடித்த 10–வது கோல் இதுவாகும். அதன் பிறகு இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.

முடிவில் ரியல் மாட்ரிட் அணி 2–1 என்ற கோல் கணக்கில் ரியல் பெடிஸ் அணியை சாய்த்தது. 26–வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி பெற்ற 19–வது வெற்றி இதுவாகும். 5 டிரா, 2 தோல்வியுடன் 62 புள்ளிகள் பெற்றுள்ள ரியல் மாட்ரிட் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

பார்சிலோனா அணி 2–வது இடம்

முந்தைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 1–2 என்ற கோல் கணக்கில் டிபொர்டிவோ லா கார்னா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டதால் அந்த அணி புள்ளி பட்டியலில் 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பார்சிலோனா அணி 27 ஆட்டத்தில் விளையாடி 18 வெற்றி, 6 டிரா, 2 தோல்வியுடன் 60 புள்ளிகள் பெற்றுள்ளது. செவிலியா அணி 27 ஆட்டத்தில் ஆடி 17 வெற்றி, 6 டிரா, 4 தோல்வியுடன் 57 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3–வது இடத்தில் உள்ளது.


Next Story