2018–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக பிரேசில் தகுதி


2018–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக பிரேசில் தகுதி
x
தினத்தந்தி 29 March 2017 7:02 PM GMT (Updated: 29 March 2017 7:02 PM GMT)

32 அணிகள் இடையிலான 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

சாவ்பாலோ,

32 அணிகள் இடையிலான 21–வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க கண்டத்திற்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்று லீக்கில் மோதி வருகின்றன. இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெறும். 5–வது இடம் பெறும் அணி ‘பிளே–ஆப்’ சுற்றில் விளையாட வேண்டி இருக்கும்.

சாவ்பாலோ நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பிரேசில், பராகுவேயை சந்தித்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த பிரேசில் 3–0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை பந்தாடியது. பிரேசில் அணியில் பிலிப் கவ்டினோ, நெய்மார், மார்செலோ தலா ஒரு கோல் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா 0–2 என்ற கோல் கணக்கில் பொலிவியாவிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. தடை காரணமாக லயோனல் மெஸ்சி ஆடாதது அர்ஜென்டினாவுக்கு பலத்த பின்னடைவாகிப் போனது. இதே போல் சிலி 3–1 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவையும், பெரு அணி 2–1 என்ற கோல் கணக்கில் உருகுவேயையும், கொலம்பியா 2–0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரையும் தோற்கடித்தன.

இந்த பிரிவில் ஒவ்வொரு அணிக்கும் இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. 14 ஆட்டங்களில் விளையாடி அதில் 10 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 33 புள்ளிகள் சேர்த்து முதலிடம் வகிக்கும் பிரேசில் அணி 2018–ம் ஆண்டு உலக கோப்பைக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதுவரை நடந்துள்ள அனைத்து உலக கோப்பையிலும் பங்கேற்ற ஒரே அணி பிரேசில் தான் என்பது நினைவு கூரத்தக்கது. கொலம்பியா 24 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், உருகுவே 23 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும், சிலி 23 புள்ளிகளுடன் 4–வது இடத்திலும், அர்ஜென்டினா 22 புள்ளிகளுடன் 5–வது இடத்திலும் உள்ளன.


Next Story