ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து யுவென்டஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி


ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து யுவென்டஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 10 May 2017 8:33 PM GMT (Updated: 10 May 2017 8:32 PM GMT)

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் யுவென்டஸ் அணி, மொனாக்கோ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

துரின்,

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் யுவென்டஸ் அணி, மொனாக்கோ அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் யுவென்டஸ் (இத்தாலி), மொனாக்கோ எப்.சி.(மொனாக்கோ), அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

அரைஇறுதி ஆட்டங்கள் 2 சுற்றுகள் கொண்டதாகும். 2 சுற்றுகள் முடிவில் அதிக கோல் அடித்த அணி வெற்றி பெறும். இதன் அரைஇறுதியில் முதல் சுற்றில் ரியல் மாட்ரிட் அணி 3–0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டையும், யுவென்டஸ் அணி 2–0 என்ற கோல் கணக்கில் மொனாக்கோ அணியையும் தோற்கடித்து முன்னிலை பெற்றன.

யுவென்டஸ் அணி வெற்றி

இந்த நிலையில் துரினில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதி 2–வது சுற்று ஆட்டத்தில் யுவென்டஸ்–மொனாக்கோ அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் யுவென்டஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் மொனாக்கோ அணியை மீண்டும் வீழ்த்தியது. யுவென்டஸ் அணியில் மரியோ மான்ட்சுகிச் 33–வது நிமிடத்திலும், டேனி ஆல்வ்ஸ் 44–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். மொனாக்கோ அணி தரப்பில் கெய்லியன் மாப்பே 69–வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

அரைஇறுதியின் இரண்டு சுற்று ஆட்டங்கள் முடிவில் யுவென்டஸ் அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. 1985, 1996–ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய யுவென்டஸ் அணி 9–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 2–வது தடவையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. கடைசியாக 2015–ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்த யுவென்டஸ் அணி இறுதிப்போட்டியில் 1–3 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியிடம் (ஸ்பெயின்) தோல்வி கண்டது.

இறுதிப்போட்டி

கார்டிப்பில் ஜூன் 3–ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் யுவென்டஸ், அணி நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட்–அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை சந்திக்கும். பெரும்பாலும் 11 முறை சாம்பியனான வலுவான ரியல் மாட்ரிட் அணியையே அந்த அணி சந்திக்க வேண்டியது வரும்.


Next Story