லா லிகா கால்பந்து சாம்பியன் பட்டத்தை நெருங்கியது, ரியல் மாட்ரிட் அணி


லா லிகா கால்பந்து சாம்பியன் பட்டத்தை நெருங்கியது, ரியல் மாட்ரிட் அணி
x
தினத்தந்தி 18 May 2017 9:30 PM GMT (Updated: 18 May 2017 7:27 PM GMT)

ஸ்பெயினில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கு இடையிலான புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

மாட்ரிட், 

ஸ்பெயினில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கு இடையிலான புகழ்பெற்ற லா லிகா கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 20 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். இந்த போட்டி தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் அணி, செல்டா டி விகோ அணியை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அணி ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் செல்டா டி விகோ அணியை தோற்கடித்தது. ரியல் மாட்ரிட் அணி தரப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 10-வது மற்றும் 48-வது நிமிடத்திலும், கரிம் பென்ஜிமா 70-வது நிமிடத்திலும், டோனி கோஸ் 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். செல்டா டி விகோ அணி தரப்பில் ஜான் குய்டெட்டி 69-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

37-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி 28 வெற்றி, 6 டிரா, 3 தோல்வியுடன் 90 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 37 ஆட்டத்தில் விளையாடி 27 வெற்றி, 6 டிரா, 4 தோல்வியுடன் 87 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. வருகிற 21-ந் தேதி நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி மாலகா அணியை சந்திக்கிறது. இதில் ரியல் மாட்ரிட் அணி டிரா செய்தாலே 33-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று விடும்.

Next Story