ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: இங்கிலாந்து, போர்ச்சுகல் 2-வது வெற்றி


ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: இங்கிலாந்து, போர்ச்சுகல் 2-வது வெற்றி
x

போர்ச்சுகல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் லக்சம்பர்க்கை பந்தாடி தொடர்ந்து 2-வது வெற்றியை தனதாக்கியது.

லண்டன்,

அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெறும் 17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு (யூரோ சாம்பியன்ஷிப்) போட்டியை நடத்தும் ஜெர்மனி தவிர எஞ்சிய 23 அணிகள் தகுதி சுற்று மூலம் தகுதியடையும். ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 53 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும்.

இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து அணி லண்டனில் நேற்று முன்தினம் நடந்த தனது 2-வது லீக் ஆட்டத்தில் உக்ரைனை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் இங்கிலாந்து 2-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை சாய்த்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்தது.

இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் 37-வது நிமிடத்திலும், சாகா 40-வது நிமிடத்திலும் கோலடித்தனர். இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் மால்டாவை தோற்கடித்து முதல் வெற்றியை பெற்றது.

'ஜெ' பிரிவில் லக்சம்பர்க்கில் நடந்த ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் லக்சம்பர்க்கை பந்தாடி தொடர்ந்து 2-வது வெற்றியை தனதாக்கியது. போர்ச்சுல் அணியில் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோலும், ஜோ பெலிக்ஸ், பெர்னார்டோ சில்வா, ஒடாவியோ, லியோ தலா ஒரு கோலும் அடித்தனர்.


Next Story