கால்பந்து உலகக்கோப்பை: மனித உரிமை தொடர்பான வாசகத்தை பயன்படுத்தக் கூடாது - டென்மார்க் அணிக்கு பிபா கடிதம்


கால்பந்து உலகக்கோப்பை: மனித உரிமை தொடர்பான வாசகத்தை பயன்படுத்தக் கூடாது - டென்மார்க் அணிக்கு பிபா கடிதம்
x

சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அரசியல் பதிவுகள் எதுவும் ஜெர்சியில் இடம் பெறக்கூடாது என பிபா அமைப்பு தெரிவித்துள்ளது.

தோஹா,

பிபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு கத்தாரில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுக்கல், போலந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 32 நாடுகளின் கால்பந்து அணிகள் பங்கேற்க உள்ளன.

இதனிடையே கத்தார் நாட்டில் கால்பந்து உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. கத்தார் அரசு தன்பாலின விவகாரத்தில் காட்டும் கடுமையான எதிர்ப்பு மற்றும் மைதான கட்டமைப்பு பணிகளில் தொழிலாளர்கள் நிலை குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள் ஆகியவை காரணமாக இந்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில், கத்தார் நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் சம்பவங்களை எதிர்க்கும் விதமாக டென்மார்க் அணி தங்களுடைய ஜெர்சிகளில் 'HUMAN RIGHTS FOR ALL' (அனைவருக்கும் மனித உரிமை) என்ற வசனம் இடம்பெறும் என தெரிவித்து இருந்தனர்.

அதேபோல கத்தார் நாட்டில் கால்பந்து மைதானங்கள் அமைக்கும் பணியில் உயிரிழந்த நபர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கருப்பு நிற ஜெர்சி அணியவும் டென்மார்க் அணியினர் திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் டென்மார்க் கால்பந்து அணிக்கு பிபா அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், கால்பந்து உலகக்கோப்பை தொடரில் மனித உரிமை தொடர்பான வாசகத்தை பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை நடைபெறும் நேரத்தில், இதுபோன்ற செயல்களில் அணிகள் ஈடுபட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனவும், அரசியல் பதிவுகள் எதுவும் ஜெர்சியில் இடம் பெறக்கூடாது எனவும் டென்மார்க் அணிக்கு பிபா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.


Next Story