'சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்' - அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அறிவிப்பு


சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் - அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அறிவிப்பு
x

image courtesy: FIFA World Cup twitter

சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று உலகக் கோப்பையை வென்ற பிறகு அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி தெரிவித்தார்.

கத்தார்,

கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தாலும், 2-வது பாதியில் கிலியன் எம்பாப்பே இரண்டு நிமிடத்துக்குள் அடுத்தடுத்து 2 கோல் அடித்து அணியை சரிவில் இருந்து நிமிரச் செய்தார்.

வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்ததால் வெற்றியை முடிவு செய்ய 30 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் மெஸ்சி ஒரு கோலும், எம்பாப்பே ஒரு கோலும் அடித்தனர். கூடுதல் நேரம் முடிவில் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது. அத்துடன் 2002-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்ற தென்அமெரிக்க நாடு என்ற சிறப்பை அர்ஜென்டினா பெற்றது. அர்ஜென்டினா அணியினர் பெனால்டி ஷூட்டில் தங்களது முதல் 4 வாய்ப்புகளையும் துல்லியமாக அடித்து கோலாக்கினர். பிரான்ஸ் அணியில் கிங்ஸ்லி கோமன் அடித்த பந்தை அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் பாய்ந்து விழுந்து தடுத்தார். மற்றொரு வாய்ப்பில் பிரான்ஸ் வீரர் சுவாமெனி பந்தை வெளியே அடித்து வீணடித்தார். 1966-க்கு பிறகு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 'ஹாட்ரிக்' கோலடித்த முதல் வீரரான எம்பாப்பேயின் சாதனை வீணானது. இருப்பினும் அவர் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் புதிய கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். இந்த இறுதிப்போட்டி தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்பாகவும், பரவசமாகவும் இருந்தது.

இறுதிப்போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரும், கேப்டனுமான லயோனல் மெஸ்சி 2 புதிய சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். உலகக் கோப்பை தொடர் ஒன்றில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி, அரைஇறுதி, இறுதிப்போட்டி ஆகியவற்றில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தனதாக்கினார். அத்துடன் உலகக் கோப்பையில் அதிக ஆட்டங்களில் (26 ஆட்டம்) ஆடியவர் என்ற சிறப்பை பெற்ற அவர் ஒட்டுமொத்தத்தில் 13 கோல்கள் அடித்து உள்ளார். இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் பிரேசில் ஜாம்பவான் பீலேவை (12 கோல்) முந்திய மெஸ்சி 4-வது இடத்தை பிரான்ஸ் வீரர் போன்டைனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல் அடித்தவரான பிரான்ஸ் அணியின் 23 வயது நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (8 கோல்கள்) தங்க ஷூவை பெற்றார். 7 கோல்கள் அடித்ததுடன் 3 கோல் அடிக்க உதவியருமான மந்திரகால்களுக்கு சொந்தக்காரரான அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு தங்கப்பந்து வழங்கப்பட்டது. ஏற்கனவே மெஸ்சி தங்கப்பந்தை 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும் பெற்று இருந்தார். இதன் மூலம் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதை 2 முறை பெற்ற வீரர் என்ற சாதனைக்கு மெஸ்சி சொந்தக்காரர் ஆனார். சிறந்த கோல்கீப்பருக்கான தங்க குளோவ்ஸ் விருது அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ்சுக்கும். சிறந்த இளம் வீரர் விருது அர்ஜென்டினாவின் என்ஜோ பெர்னாண்டஸ்சுக்கும் வழங்கப்பட்டன.

இந்த உலகக் கோப்பை போட்டியில் அரங்கேறிய 64 ஆட்டங்களில் மொத்தம் 172 கோல்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட உலகக் கோப்பையாக இது அமைந்தது. இதற்கு முன்பு 1998, 2014-ம் ஆண்டுகளில் தலா 171 கோல்கள் அடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. இந்த உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்த அணி என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றது. அந்த அணி 16 கோல்கள் அடித்தது. அதற்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா அணி 15 கோல்கள் அடித்து 2-வது இடம் பெற்றது.

உலகக் கோப்பையை உச்சி முகர்ந்த அர்ஜென்டினா அணிக்கு ரூ.347 கோடியும், 2-வது இடத்தை பிடித்த பிரான்சுக்கு ரூ.248 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன.

அர்ஜென்டினா அணி உலக கோப்பையை வென்றதும் அந்த நாடே திருவிழா கோலம் பூண்டது. அங்குள்ள தெருக்கள் மற்றும் பொது இடங்களில் திரண்ட ரசிகர்கள் விடிய, விடிய வெற்றி மகிழ்ச்சியை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். அர்ஜென்டினா அணியின் சீருடை மற்றும் கேப்டன் மெஸ்சியின் படம் பொறித்த பனியனை அணிந்தும், தேசிய கொடியை கையில் ஏந்தியும் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவை பொறுத்தமட்டில் அர்ஜென்டினா அணிக்கும், அதன் கேப்டன் மெஸ்சிக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாடு, கேரளா, பெங்கால் உள்ளிட்ட மாநிலங்களில் அர்ஜென்டினா அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினர். இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற மெஸ்சியின் கனவு 5-வது முயற்சியில் கனிந்து இருக்கிறது. மரடோனாவுக்கு (1986) பிறகு அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ள மெஸ்சி தனது நீண்ட கால ஏக்கத்தை தீர்த்து இருப்பதுடன் கிளப் அணிகளுக்காக சிறப்பாக செயல்படும் அவர் சொந்த நாட்டு அணிக்காக பெரிதாக சாதிக்கவில்லை என்ற விமர்சனத்துக்கும் முடிவு கட்டி இருக்கிறார்.

'இது தான் தனக்கு கடைசி உலகக் கோப்பை போட்டியாகும், அடுத்த போட்டிக்கு 4 ஆண்டுகள் இருப்பதால் வயது அதிகரித்து தன்னால் விளையாட வாய்ப்பில்லை' என்று சமீபத்தில் தெரிவித்து இருந்த 35 வயது மெஸ்சி இந்த உலகக் கோப்பையுடன் சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுவார் என்று செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தனது ஓய்வு குறித்த யூகங்களுக்கு மெஸ்சி முற்றுப்புள்ளி வைத்தார். வெற்றிக்கு பிறகு மெஸ்சி அளித்த ஒரு பேட்டியில், 'உலகக் கோப்பையை வெல்வதை எனது வாழ்நாள் இலக்காக கருதினேன். சிறுவயது முதல் இது தான் எனது கனவாகும். இதனை எட்டியதை என்னால் நம்ப முடியவில்லை. உலகக் கோப்பையை வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை. அர்ஜென்டினா அணிக்காக சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். உலக சாம்பியனாக தொடர்ந்து ஆடி அனுபவிக்க விரும்புகிறேன். கால்பந்தை நேசிப்பதால் மேலும் சில போட்டிகளில் ஆடுவேன்.

உலகக் கோப்பைக்காக நான் மிகவும் ஏங்கினேன். கடவுள் எனக்கு இந்த கோப்பையை வழங்குவார் என்பது தெரியும். இந்த முறை நினைத்த மாதிரி நடக்கும் என்று நம்பினேன். இதற்காக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இறுதியில் அழகான உலகக் கோப்பையை வென்று இருக்கிறோம். இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வோம்' என்று தெரிவித்தார்.

35 வயதான மெஸ்சி 2005-ம் ஆண்டு சர்வதேச கால்பந்து அரங்கில் அடியெடுத்து வைத்தார். அர்ஜென்டினா அணிக்காக 172 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 98 கோல்கள் அடித்து இருக்கிறார்.


Next Story