ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சி.-கோவா அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சி.-கோவா அணிகள் இன்று மோதல்
x

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கோவா அணிகள் மோதுகின்றன.

சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-கோவா அணிகள் மோதுகின்றன.

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் 'டாப்-6' இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றை எட்டும். இந்த தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு அரங்கேறும் லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, எப்.சி. கோவாவை எதிர்கொள்கிறது.

அனிருத் தபா தலைமையிலான சென்னை அணி கொல்கத்தாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வலுவான ஏ.டி.கே.மோகன் பகானை வீழ்த்தியது. அடுத்து சென்னையில் நடந்த ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூருவுடன் டிரா கண்டது. இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி வீரர் ராய் கிருஷ்ணாவை முரட்டுத்தனமாக காலால் தடுத்ததால் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சென்னை அணியின் கோல்கீப்பர் தேவ்ஜித் மஜூம்தார் இன்றைய போட்டியில் ஆடமுடியாதது இழப்பாகும். அவருக்கு பதிலாக தேவன்ஷ் தபாஸ் கோல் கீப்பராக செயல்படுவார்.

போட்டி குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரிச் கூறும் போது '2 ஆட்டங்களில் ஆடி 4 புள்ளிகள் எடுத்து இருப்பது மோசமானது கிடையாது. எங்கள் இலக்கை அடைவதற்கு இதே ஆற்றல் மற்றும் உத்வேகத்துடன் தொடர்ந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இது மிகவும் நீண்ட தொடராகும். நமது அனுபவத்தின் மூலம் பலத்தையும், திறமையையும் மேம்படுத்த வேண்டும்.' என்றார்.

தனது முதல் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்காலை தோற்கடித்த பிரன்டன் பெர்னாண்டஸ் தலைமையிலான எப்.சி.கோவா அணி 2-வது வெற்றிக்கு குறி வைத்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 11-ல் கோவாவும், 8-ல் சென்னையும் வெற்றி பெற்றன. 2 ஆட்டம் டிராவில் முடிந்தது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதற்கிடையே, கவுகாத்தியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் 3-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை வீழ்த்தி முதலாவது வெற்றியை சுவைத்தது.


Next Story