உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணியை வீழ்த்தி கத்தார் அணி வெற்றி


உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணியை வீழ்த்தி கத்தார் அணி வெற்றி
x

Image : Indian Football Team

உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது

புவனேஸ்வர்,

ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2-வது சுற்றில் 36 அணிகள் பங்கேற்று உள்ளன. அவை 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா 2 முறை லீக்கில் மோதுகின்றன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3-வது சுற்றுக்கு முன்னேறும். 2-வது சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்றன.இந்தியா 'ஏ' பிரிவில் கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி குவைத் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த கத்தார் அணியுடன் இன்று மோதியது .ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கத்தார் அணியின் டெரெக் மெஷல் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் கத்தார் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் 47வது நிமிடத்தில் கத்தார் அணியின் அல்மோஸ் அலி, 86வது நிமிடத்தில் யூசுப் அப்தரிசாக் கோல் அடித்தனர்.

இந்த ஆட்டத்தில் போராடியும் இந்திய அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 3-0 என கத்தார் அணி வெற்றி பெற்றது.


Next Story