ஆயுட்கால தலைவராக நியமிக்கப்பட்ட கல்மாடி, சவுதாலாவுக்கு கடும் எதிர்ப்பு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு விளையாட்டு அமைச்சகம் நோட்டீஸ்


ஆயுட்கால தலைவராக நியமிக்கப்பட்ட கல்மாடி, சவுதாலாவுக்கு கடும் எதிர்ப்பு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு விளையாட்டு அமைச்சகம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 28 Dec 2016 8:54 PM GMT (Updated: 28 Dec 2016 8:54 PM GMT)

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவராக சுரேஷ் கல்மாடி, அபய்சிங் சவுதாலா ஆகியோர் நியமிக்கப்பட்டதற்கு விளையாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முடிவை திரும்ப பெறாவிட்டால் உறவுகளை துண்டிக்க நேரிடும் என்று எச்சரித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவராக சுரேஷ் கல்மாடி, அபய்சிங் சவுதாலா ஆகியோர் நியமிக்கப்பட்டதற்கு விளையாட்டு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முடிவை திரும்ப பெறாவிட்டால் உறவுகளை துண்டிக்க நேரிடும் என்று எச்சரித்து இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய நியமனம்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) கவுரவ ஆயுட்கால தலைவர்களாக சுரேஷ்கல்மாடி, அபய்சிங் சவுதாலா ஆகியோர் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டனர். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவு மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இருவரும் ஏற்கனவே இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்களாக இருந்து, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியை இழந்தவர்கள். குறிப்பாக சுரேஷ் கல்மாடி, காமன்வெல்த் விளையாட்டு நிதி முறைகேட்டில் கைது செய்யப்பட்டு 10 மாத சிறைவாசத்தை அனுபவித்தவர்.

இதையடுத்து அவர்களது நியமனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கம் கேட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அவர்கள் இருவரையும் உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது விலகச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துடனான அனைத்து உறவும் துண்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் ஒலிம்பிக் சங்கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

பணிந்தார் கல்மாடி

விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் கூறும் போது, ‘ஊழல் புகாரில் சிக்கிய கல்மாடி, சவுதாலா ஆகியோரின் நியமனம் ஐ.ஓ.ஏ விதிமுறைக்கு எதிரானது. விளையாட்டு அமைச்சகம் இதை ஏற்றுக்கொள்ளாது. விளையாட்டில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களை நீக்காவிட்டால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளமாட்டோம்’ என்றார்.

ஐ.ஓ.ஏ.யின் முடிவு முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி அஜய் மக்கானையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. ‘இந்த முடிவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இது விளையாட்டு துறைக்கும், இந்தியாவின் புகழுக்கும் நல்ல தல்ல’ என்று குறிப்பிட்டார்.

எதிர்ப்பு வலுத்து வருவதன் எதிரொலியாக சுரேஷ் கல்மாடி பணிந்து விட்டார். அவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஆயுட்கால தலைவர் என்ற கவுரவ பதவியை வழங்கியதற்கு நன்றி. ஆனால், இதை ஏற்றுக்கொள்வதற்கு சரியான நேரமாக இதை கருதவில்லை. ஊழல் புகாரில் இருந்து எனது பெயர் விடுவிக்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். அதுவரை இந்த கவுரவ பதவியை ஏற்றுக்கொள்வதை தள்ளி வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சவுதாலா பிடிவாதம்

ஆனால் கண்டன கணை பாய்ந்தாலும், அபய்சிங் சவுதாலா பின்வாங்குவதாக இல்லை. சவுதாலா கூறும் போது, ‘விஜய் கோயலின் கருத்து எனக்கு ஆச்சரியம் அளித்தது. அவர் என் மீது கிரிமினல் மற்றும் ஊழல் வழக்குகள் இருப்பதாக சொல்லி இருக்கிறார். என் மீது இருப்பது கிரிமினல் வழக்கு அல்ல, இது ஒரு அரசியல் ரீதியிலான வழக்கு. ஒரு விளையாட்டுத்துறை மந்திரியாக விஜய் கோயல் தனது கடமையை செய்வதில் தோல்வி அடைந்து விட்டார். விளையாட்டுத்துறை மந்திரி பதவியில் முழுமை பெறும் வகையில் செயல்படும்படி அவருக்கு அறிவுரை வழங்குகிறேன். அதை அவர் சரியாக செய்தால், நாம் வெல்லும் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவருக்கும் பாராட்டு கிடைக்கும். உண்மை நிலை தெரியாமல் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதற்கு பதிலாக, தனது பணியில் கவனம் செலுத்த வேண்டும். ஒலிம்பிக் விளையாட்டுகளுக்காக நான் நிறைய உழைத்துள்ளேன். ஆயுட்கால தலைவர் கவுரவத்துக்கு நான் தகுதியானவன்’ என்றார்.


Next Story