உலக பேட்மிண்டன் போட்டி சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி


உலக பேட்மிண்டன் போட்டி சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 24 Aug 2017 9:30 PM GMT (Updated: 24 Aug 2017 5:26 PM GMT)

23–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது.

கிளாஸ்கோ,

23–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3–வது சுற்றில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து 19–21, 23–21, 21–17 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனை செங்கான் யியை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். ஒரு கட்டத்தில் முதல் செட்டை இழந்து 2–வது செட்டிலும் 13–16 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த சிந்து, அதன் பிறகு ஆக்ரோ‌ஷமாக விளையாடி சரிவில் இருந்து மீண்டு வந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 27 நிமிடங்கள் தேவைப்பட்டது. அடுத்து சீனாவின் சன் யுவை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் 21–14, 21–18 என்ற நேர்செட்டில் டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் அன்டோன்செனை வெளியேற்றி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். உலக தரவரிசையில் 10–வது இடம் வகிக்கும் ஸ்ரீகாந்த் கால்இறுதியில் நம்பர் ஒன் வீரர் கொரியாவின் சன் வான் ஹோவுடன் மோத உள்ளார். சன் வான் ஹோவுக்கு எதிராக 8 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ள ஸ்ரீகாந்த் அதில் 4–ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றால் பதக்கம் உறுதியாகி விடும்.

மற்றொரு இந்திய வீரர் அஜய் ஜெயராம் 11–21, 10–21 என்ற நேர் செட்டில் நடப்பு சாம்பியன் சென் லாங்கிடம் (சீனா) வீழ்ந்தார்.


Next Story