துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 13 Sep 2017 11:00 PM GMT (Updated: 13 Sep 2017 6:38 PM GMT)

புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.

* வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 2–1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ்–அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெல்பாஸ்டில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆட்டம் தொடங்கும் முன்பே பலத்த மழை பெய்ததால் இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அடுத்து வெஸ்ட்இண்டீஸ்–இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் வெஸ்ட்இண்டீஸ் அணி குறைந்தது 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே 2019–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும். 

* தபால் துறையினருக்கான 31–வது அகில இந்திய கபடி போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 46–7 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்தை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் ஆந்திரா அணி 35–9 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானா அணியை வென்றது. இன்னொரு ஆட்டத்தில் கர்நாடகா அணி 22–9 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கானாவை வீழ்த்தியது. 

* புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்–ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 2 நாள் போட்டியான இது சென்னையை அடுத்த காலவாக்கத்தில்  உள்ள எஸ்.எஸ்.என்.என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. 

* ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இளையோர் கால்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டங்களில் பெரி இன்ஸ்டிடியூட் அணி 5–0 என்ற கோல் கணக்கில் சாய்ராம் கல்லூரியையும், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி அணி 3–0 என்ற கோல் கணக்கில் ஆல்பா கலைக் கல்லூரியையும் வென்றது. 

* பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேத்தி அளித்த ஒரு பேட்டியில், ‘வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்படி வெஸ்ட்இண்டீஸ் அணி நவம்பர் மாதம் இறுதியில் பாகிஸ்தானுக்கு வந்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடும். இந்த ஆட்டங்கள் லாகூரில் நடத்தப்படும். இதேபோல் இலங்கை அணி ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் அதனை இரண்டு ஆட்டமாக நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Next Story