ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, சிந்து வெற்றி


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, சிந்து வெற்றி
x
தினத்தந்தி 20 Sep 2017 11:30 PM GMT (Updated: 20 Sep 2017 7:12 PM GMT)

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.

டோக்கியோ,

மொத்தம் ரூ.2 கோடி பரிசுத் தொகைக்கான ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது.

இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலக தர வரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 19-ம் நிலை வீராங்கனை மினாட்சு மிதானியை (ஜப்பான்) எதிர்கொண்டார். 1 மணி 4 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து முதல் செட்டை 12-21 என்ற கணக்கில் இழந்தாலும், பின்னர் சுதாரித்து ஆடி 21-15, 21-17 என்ற செட் கணக்கில் அடுத்த 2 செட்களை தனதாக்கி வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் 2-வது சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, உலக சாம்பியனான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை சந்திக்கிறார். கடந்த வாரத்தில் நடந்த கொரியா ஓபன் போட்டியில் சிந்து, ஒகுஹராவை வீழ்த்தி இருந்தது நினைவிருக்கலாம்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-17, 21-9 என்ற நேர்செட்டில் 25-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் பொம்பாவீ சோசுவாங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். 2-வது சுற்று ஆட்டத்தில் சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 12-21, 21-11 என்ற செட் கணக்கில் சீனாவின் தியான் ஹூவெய்யை சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 21-12, 21-14 என்ற நேர்செட்டில் டென்மார்க்கை சேர்ந்த ஆன்டெர்ஸ் அன்டோன்செனை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இதேபோல் இந்திய வீரர் சமீர் வர்மா 21-12, 21-19 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் கோசிட் பெட்பிரதாப்பை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்திய வீரர் சவுரப் வர்மா 21-11, 15-21, 13-21 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான லின் டானிடம் (சீனா) தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு இந்திய வீரர் சாய் பிரனீத் 23-21, 17-21, 14-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் லீ டோங் குன்னிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

Next Story