புரோ கபடி லீக்: நெருக்கடியில் தவிக்கும் தமிழ் தலைவாஸ் பெங்கால் அணியுடன் இன்று மோதல்


புரோ கபடி லீக்: நெருக்கடியில் தவிக்கும் தமிழ் தலைவாஸ் பெங்கால் அணியுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 23 Sep 2017 11:30 PM GMT (Updated: 23 Sep 2017 7:03 PM GMT)

புரோ கபடி போட்டியில் நெருக்கடியில் தவித்து வரும் தமிழ் தலைவாஸ் அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

புதுடெல்லி,

5-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா 3 முறை மோத வேண்டும். எதிர் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை மல்லுக்கட்ட வேண்டும். அத்துடன் ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் விளையாட வேண்டும். மொத்தத்தில் ஒரு அணி 22 லீக் ஆட்டத்தில் மோத வேண்டும்.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். அறிமுக அணியாக களம் கண்டுள்ள தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதுவரை 11 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றி, 7 தோல்வி, 2 டையுடன் 22 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் (பி பிரிவு) அணியை சந்திக்கிறது. இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி-அரியானா ஸ்டீலர்ஸ் (ஏ பிரிவு) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணிக்கு இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் மிகவும் முக்கியமானதாகும். எஞ்சிய 11 ஆட்டங்களில் குறைந்தபட்சம் 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற சிக்கலில் தவிக்கிறது.
வருகிற 29-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு 6 ஆட்டங்கள் இருக்கிறது. சொந்த ஊர் ரசிகர்களின் ஆதரவுடன் தமிழ் தலைவாஸ் அணி எழுச்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழ் தலைவாஸ் அணி நெருக்கடியை சமாளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்றிரவு அரங்கேறிய 90-வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 33-29 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை வீழ்த்தியது. 17-வது லீக்கில் ஆடிய பெங்கால் அணிக்கு இது 8-வது வெற்றியாகும். பெங்களூரு புல்சுக்கு விழுந்த 10-வது அடியாகும்.
இன்னொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி 34-29 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை சாய்த்தது.

Next Story