புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 9-வது தோல்வி


புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 9-வது தோல்வி
x
தினத்தந்தி 30 Sep 2017 9:45 PM GMT (Updated: 30 Sep 2017 7:55 PM GMT)

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியிடம் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சென்னை,

புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி நேற்றைய ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியிடம் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தமிழ் தலைவாசுக்கு விழுந்த 9-வது அடி இதுவாகும்.

5-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் ‘ஏ’, ‘பி’ என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா 3 முறையும், அடுத்த பிரிவில் உள்ள 6 அணிகளுடன் ஒரு முறையும், ‘வைல்டு கார்டு’ ஆட்டம் ஒன்றிலும் மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணியும் 22 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும்.

இதன் சென்னை சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. முதல் நாளில் புனேரி பால்டனிடம் தமிழ் தலைவாஸ் 20-33 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் நேற்றிரவு இதே மைதானத்தில் அரங்கேறிய 103-வது லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழ் தலைவாஸ் அணி, ‘ஏ’ பிரிவில் உள்ள முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் புள்ளியை கேப்டன் அஜய் தாகூர் பெற்றுத் தந்தார். அதன் பிறகு ஆட்டம் சூடுபிடித்ததும், ஜெய்ப்பூர் அணியின் கை கொஞ்சம் ஓங்கியது. தமிழ் தலைவாஸ் அணியை ஆல்-அவுட் செய்த ஜெய்ப்பூர் முதல் பாதியில் 17-15 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

பிற்பாதியில் தமிழ் தலைவாஸ் பதிலடி கொடுக்கும் வகையில் வேகம் காட்டினர். 20-20 என்று சமனுக்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு மீண்டும் ஜெய்ப்பூர் வீரர்களின் ‘பிடி’ தலைதூக்கியது. தமிழ் தலைவாசுக்கு ஓரளவு வெற்றி வாய்ப்பு தென்பட்ட சூழலில், இரு நிமிடங்கள் இருக்கும் போது கேப்டன் அஜய் தாகூர், பிரபஞ்சன் இருவரும் ரைடுக்கு சென்று அடுத்தடுத்து எதிரணியிடம் சிக்கிக்கொண்டனர். இது தமிழ் தலைவாசுக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது.

இதன் பின்னர் கிடைத்த முன்னிலையை கடைசிவரை தக்க வைத்துக் கொண்ட ஜெய்ப்பூர் அணி 27-26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை சாய்த்து 7-வது வெற்றியை பதிவு செய்தது. அஜய் தாகூர் ரைடு மூலம் 13 புள்ளிகளை எடுத்தும் தலைவாசுக்கு பலன் இல்லாமல் போய் விட்டது.

15-வது லீக்கில் விளையாடிய தமிழ் தலைவாசுக்கு இது 9-வது தோல்வியாகும். மேலும் 4 வெற்றி, 2 ‘டை’யும் கண்டுள்ள தமிழ் தலைவாஸ் 33 புள்ளிகளுடன் தொடர்ந்து தனது பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த தோல்வியின் மூலம் தமிழ் தலைவாசின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 34-33 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தாவை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது.

இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர்- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ்- மும்பை (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story